சுடச்சுட

  


  தஞ்சாவூர் மக்களவை, சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஏறத்தாழ 20 நாள்களாக மேற்கொள்ளப்பட்டு வந்த பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலை நிறைவடைந்தது.
  மக்களவைப் பொதுத் தேர்தலுடன் தஞ்சாவூர் சட்டப்பேரவைக்கான இடைத்தேர்தலும் வியாழக்கிழமை (ஏப்.18) நடைபெறவுள்ளது. தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் திமுக, தமாகா, அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்களும், சுயேச்சை வேட்பாளர்களும் என மொத்தம் 12 பேர் போட்டியிடுகின்றனர்.
  இதேபோல, தஞ்சாவூர் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக, அதிமுக, அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்களும், சுயேச்சை வேட்பாளர்களும் என மொத்தம் 13 பேர் போட்டியிடுகின்றனர்.
  இதை முன்னிட்டு 20 நாட்களாக அரசியல் கட்சிகள் முழுவீச்சில் பிரசாரம் செய்து வந்தன. குறிப்பாக வேட்பு மனு தாக்கல் முடிவடைந்த பிறகு பிரசாரம் விறுவிறுப்படைந்தது. 
  திமுக சார்பில் அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின், கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் தேர்தல் பிரசார குழுத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் இரா. முத்தரசன், தா. பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி.கே. ரங்கராஜன், மதிமுக பொதுச் செயலர் வைகோ, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, நடிகர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பிரசாரம் செய்தனர்.
  இதேபோல, அதிமுக சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், கூட்டணி கட்சிகளான தமாகா தலைவர் ஜி.கே. வாசன், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோர் பிரசாரம் செய்தனர். மேலும், அமமுக துணைப் பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் பிரசாரம் செய்தனர்.
  இவர்கள் தவிர, ஆட்டோக்கள், வேன்கள், கார்கள், இரு சக்கர வாகனங்கள் மூலம் அரசியல் கட்சிகள் தொடர்ச்சியாக பிரசாரம் செய்து வந்தன. வேட்பாளர்களும் ஒவ்வொரு பகுதியாகச் சென்று வாக்குச் சேகரித்தனர்.
  இந்நிலையில், பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலையுடன் நிறைவடைந்தது. நிறைவு நாளில் திமுகவை சேர்ந்த மக்களவை தொகுதி வேட்பாளர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் டி.கே.ஜி. நீலமேகம் மாநகரில் நான்கு, இரு சக்கர வாகனங்களில் பிரசாரம் செய்தனர். நிறைவாக பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள அண்ணாசிலை முன் இருவருக்கும் ஆதரவாக திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி பிரசாரம் செய்தார்.
  இதேபோல, மக்களவைத் தொகுதி தமாகா வேட்பாளர் என்.ஆர். நடராஜன், சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர். காந்தி வாகனங்களில் மாநகரில் பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்தனர். மேலும், இவர்களுக்கு ஆதரவாக தமாகா தலைவர் ஜி.கே. வாசன் தஞ்சாவூரில் நடந்தும், வாகனங்களில் சென்றும் வாக்கு சேகரித்தார். பின்னர் ரயிலடி எம்.ஜி.ஆர். சிலை முன் பிரசாரத்தை நிறைவு செய்தனர்.
  அமமுக சார்பில் போட்டியிடும் மக்களவைத் தொகுதி வேட்பாளர் பொன். முருகேசன், சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் எம். ரெங்கசாமி மாநகரில் பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்தனர். இதேபோல, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்ளிட்டோரும் முழு வீச்சில் பிரசாரம் மேற்கொண்டனர்.
  கும்பகோணம்: மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்குட்பட்ட கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் கே. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் இரா. முத்தரசன், இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் உள்ளிட்ட பலரும் பிரசாரம் செய்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai