பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையைமேம்படுத்த கோரிக்கை
By DIN | Published On : 21st April 2019 03:56 AM | Last Updated : 21st April 2019 03:56 AM | அ+அ அ- |

பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு நவீன கருவிகள் வழங்கி மேம்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில், தஞ்சாவூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் டாக்டர் அ.காந்தி அண்மையில் ஆய்வு மேற்கொண்டார்.
முதலில், புறநோயாளிகள் பிரிவு மற்றும் அறுவை சிகிச்சை பிரிவுக்கென புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அடுத்து, மருத்துவர்கள் வருகைப் பதிவேடு, மருந்து வைப்பறை ஆகியவற்றையும் பார்வையிட்டு அவர் ஆய்வு செய்தார். மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் கனிவுடன் பேசி, சிகிச்சை
அளிக்குமாறு மருத்துவர்களிடம் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ராணி, மருத்துவர் நியூட்டன் மற்றும் பொதுப்பணித்துறை பொறியாளர் (கட்டடப் பிரிவு) ஆகியோர் உடனிருந்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் கோரிக்கை: இதனிடையே, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் டாக்டர் அ.காந்தியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பட்டுக்கோட்டை ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றியத் தலைவர் மோரிஸ் அண்ணாதுரை ஆகியோர் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், தினசரி ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் முக்கியத்துவம் வாய்ந்த பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் நவீன கருவிகள் இல்லாததால், விபத்தில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் இங்கு வருபவர்களை சிகிச்சைக்காக தஞ்சாவூர் அழைத்துச் செல்லும் அவல நிலை உள்ளது.
எனவே, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் மிக முக்கியமான சி.டி. மற்றும் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வசதி, புற்றுநோய் கண்டறியும் நவீன கருவி வசதி ஏற்படுத்த வேண்டும். ரத்த சேமிப்பு வங்கியை நவீனப்படுத்தி, விரிவுபடுத்த வேண்டும். உள்நோயாளி பிரிவில் கூடுதல் படுக்கை, மின்விசிறி, மின்விளக்கு வசதிகள் செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது. மனுவைப் பெற்றுக் கொண்ட இணை இயக்குநர் காந்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.