பேருந்து கவிழ்ந்து விபத்து: ஒருவர் சாவு 29 பேர் காயம்
By DIN | Published On : 21st April 2019 03:58 AM | Last Updated : 21st April 2019 03:58 AM | அ+அ அ- |

தஞ்சாவூர் அருகே சாலையோர வயலில் சனிக்கிழமை தனியார் பேருந்து கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்தார். 29 பேர் காயமடைந்தனர்.
தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் நோக்கி பிற்பகலில் தனியார் பேருந்து புறப்பட்டது. இப்பேருந்து வயலூர் பகுதியில் வளைவில் சென்றபோது, எதிரே வந்த கார் மோதும் விதமாக வந்ததாகக் கூறப்படுகிறது. எனவே, மோதுவதைத் தவிர்ப்பதற்காக ஓட்டுநர் முயன்றபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலையோர வயலில் பேருந்து கவிழ்ந்தது.
இதில், பலத்தக் காயமடைந்த மானாங்கோரையைச் சேர்ந்த ஜெயக்குமாரின் மகன் சண்முகசுந்தரம் (30) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இவர் வயலூரை அடுத்துள்ள மானாங்கோரையில் இறங்குவதற்குத் தயாராகப் படிக்கட்டுப் பகுதியில் நின்றார். பேருந்து கவிழ்ந்தபோது இவர் வெளியே தள்ளப்பட்டார். அப்போது, இவர் மீது பேருந்து விழுந்ததால், அதில் சிக்கி இறந்தது போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்தது.
மேலும், கிராம மக்கள் நிகழ்விடத்துக்குச் சென்று, ஜன்னல்கள் வழியாக நுழைந்து, பேருந்துக்குள் சிக்கி இருந்த பந்தநல்லூரைச் சேர்ந்த குந்தலாம்பிகை (62), திருவிடைமருதூர் ராஜலட்சுமி (67), சுவாமிமலை ஆனந்தி (21), கடலூர் மாவட்டம், வீராந்தபுரம் தேவகி (58), பின்னத்தூர் தமிழ்ச்செல்வி (85) உள்பட 11 பெண்கள், 2 குழந்தைகள், 11 ஆண்கள் என மொத்தம் 29 பேரை வெளியே கொண்டு வந்தனர்.
இதையடுத்து, காயமடைந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தஞ்சாவூர் தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.