ஆணி பலகையில் நடந்து நேர்த்திக் கடன்
By DIN | Published On : 04th August 2019 03:31 AM | Last Updated : 04th August 2019 03:31 AM | அ+அ அ- |

கும்பகோணம் அருகேயுள்ள தாராசுரம் திரௌபதி அம்மன் கோயிலில், ஆடி வெள்ளியையொட்டி, தாராசுரம் திருக்குளம் மேல்கரை திரௌபதி அம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு 15 ஆம் ஆண்டு திருவிழா நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு, ஆக. 1 இரவு திரௌபதி அம்மனுக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதையடுத்து, வெள்ளிக்கிழமை காலை 9 முதல் நண்பகல் 12 மணி வரை திரௌபதி அம்மனின் சகஸ்ர நாமாவளி போற்றி வழிபாடும், சமபந்தி விருந்தும் நடைபெற்றன.
பின்னர், 10,000 இரும்பு ஆணிகள் பொருத்தப்பட்ட பலகை சன்னதி தெருவில் அமைக்கப்பட்டது. இதைச் சுற்றி அக்னி ஏற்றப்பட்டது. பிற்பகல் அம்மனுக்குப் பக்தர்கள் தாய் வீட்டு சீர்வரிசைகளைக் கொண்டு வந்தனர். மாலையில் அரசலாற்றில் இருந்து சக்தி கரகம், வீரபத்திர மகா சூலம், சடையப்பர், முனீசுவரர் மகாவேல், அம்மன் திரிசூலம், அலகு காவடி, அக்னி கொப்பரையுடன் திரௌபதி அம்மன் திருவுருவப் புறப்பாடு நடைபெற்றது. அப்போது, நூற்றுக்கணக்கான பக்தர்கள் அக்னி ஆணியில் ஏறி நடந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.