தேசிய மருத்துவ ஆணையத்துக்குக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறக் கூடாது

தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை மத்திய அரசு  பெறக் கூடாது என்றார் சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கப் பொதுச் செயலர் ஜி.ஆர். ரவீந்திரநாத்.


தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை மத்திய அரசு  பெறக் கூடாது என்றார் சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கப் பொதுச் செயலர் ஜி.ஆர். ரவீந்திரநாத்.
தஞ்சாவூரில் தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை கண்டித்தும், மருத்துவக் கல்வியில் திணிக்கப்படும் நெக்ஸ்ட் தேர்வை எதிர்த்தும் சனிக்கிழமை மாலை நடைபெற்ற கருத்தரங்கத்தில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:
மருத்துவக் கல்வியையும், மருத்துவச் சேவையையும் மத்திய அரசு முழுமையாக வணிகமயமாக்கவும், கார்பரேட்மயமாக்கவும் நினைக்கிறது. அதற்குத் தடையாக உள்ள இந்திய மருத்துவக் கவுன்சிலை ஒழித்துவிட்டு, அதற்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் என்கிற எதேச்சாதிகார அமைப்பை உருவாக்க மக்களவையிலும், மாநிலங்களவையிலும் மசோதாவை நிறைவேற்றியுள்ளது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
இந்த மசோதா கூட்டாட்சிக் கோட்பாடு, மாநில சுயாட்சி, சமூக நீதி போன்றவற்றுக்கு எதிரானது. மருத்துவக் கல்வியை ஏழைகள் படிப்பதைத் தடுக்கக்கூடியதாக இருக்கிறது. இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்றால்தான் அது சட்டமாகும். எனவே, மருத்துவ மாணவர்கள், மருத்துவர்களின் போராட்டத்தை மதித்து, மத்திய அரசு இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறக் கூடாது. ஏற்கெனவே தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு சட்டப்பேரவையில் மசோதாக்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன. இதுவரை இந்த மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறவில்லை. அது தற்போது நீதிமன்ற நிலுவையில் உள்ளது. அதனால், அது சட்டமாகவில்லை.
இதேபோல, இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறக்கூடாது. குடியரசுத் தலைவரும் ஒப்புதல் வழங்கக் கூடாது. மருத்துவ மாணவர்கள், மருத்துவர்களின் அகில இந்தியப் போராட்டத்தை மதித்து, மத்திய அரசு செயல்பட வேண்டும். 
பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு போன்ற ஜனநாயக நிறுவனங்களை ஒழிக்க வரைவு தேசியக் கல்விக் கொள்கை 2019 அடிப்படையாக இருக்கிறது. இக்கொள்கை என்பது கல்வியை வணிகமயமாக்குவது, கல்வியில் பிற்போக்குத்தனமான கருத்துகளைப் புகுத்துவது மட்டுமல்லாமல், முழுமையாகக் குலக் கல்வி, சாதி அடிப்படையில் பரம்பரைத் தொழிலை கொண்டு வருவதற்கான முயற்சியாக இருக்கிறது.
இதேபோல, கிராமப்புற, ஏழை மாணவர்கள் கல்வியைப் பெற முடியாத சூழ்நிலையை இந்த தேசியக் கல்விக் கொள்கை உருவாக்குகிறது. இக்கொள்கை நாட்டு மக்களுக்கும், ஏழைகளுக்கும் எதிரானது. எனவே, இக்கொள்கையை மத்திய அரசுத் திரும்பப் பெறவேண்டும். இதை வலியுறுத்தி எங்களது போராட்டம் தொடரும். 
மத்திய அரசு தேசிய மருத்துவ ஆணையத்தைக் கொண்டு வரக் கூடாது. தேசியக் கல்விக் கொள்கையைத் திரும்பப் பெற வேண்டும் என்றார் ரவீந்திரநாத்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com