பேராவூரணியில் அரசு கொப்பரை கொள்முதல் நிலையம் திறப்பு

பேராவூரணியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி வளாகத்தில் வேளாண்மை உற்பத்தியாளர்கள்

பேராவூரணியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி வளாகத்தில் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் சார்பில்,  அரசு கொப்பரைக் கொள்முதல் நிலையம் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
 விழாவுக்கு மண்டல இணைப் பதிவாளர் மொ.ஏகாம்பரம் தலைமை வகித்தார். பட்டுக்கோட்டை வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத் தலைவர் கார்த்திகேயன், திருச்சிற்றம்பலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான எஸ்.வி. திருஞானசம்பந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்எல்ஏக்கள் (பேராவூரணி) மா.கோவிந்தராசு,  (பட்டுக்கோட்டை) சி.வி. சேகர் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். 
மண்டல இணைப் பதிவாளர் மொ.ஏகாம்பரம் தலைமை வகித்துப் பேசுகையில், கூட்டுறவு சங்கம் சார்பில் விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க்கடன்  258 கோடி ரூபாய் வழங்க, கடந்த ஆண்டு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 46 ஆயிரம் விவசாயிகளுக்கு 256 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.நிகழாண்டு  இலக்கையும் தாண்டி ரூ. 311 கோடி பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இ சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து வகையான சான்றுகளையும் விண்ணப்பித்து பெறலாம். தஞ்சை மாவட்டத்தில் குறிப்பாக ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதிகளில் 38 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 
இங்குள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் பட்டுக்கோட்டை,  பேராவூரணி,  ஒரத்தநாடு  ஆகிய  மூன்று இடங்களில் கொப்பரை கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த கொப்பரை மையம் 6 மாத காலத்திற்கு செயல்படும். 
பந்து கொப்பரைக்கு அரசால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதார விலையாக கிலோ ஒன்றுக்கு ரூ 99.20 பைசா வீதமும், அரைவைக் கொப்பரை கிலோ ஒன்றுக்கு ரூ. 95.21 பைசா வீதமும் கொள்முதல் செய்யப்படும். இதனை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் ஆர்.பி. ராஜேந்திரன் வரவேற்றார். கூட்டுறவு சங்க செயலாளர் ஆர். தெட்சிணாமூர்த்தி நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com