வாகன விதிமீறல்: அபராதம் வசூலிக்க இ - சலான் முறை அறிமுகம்

தஞ்சாவூரில் வாகன விதிமீறலுக்கு அபராதம் விதித்து வசூலிப்பதற்காக, இ - சலான் முறை ஞாயிற்றுக்கிழமை மாலை அறிமுகம்


தஞ்சாவூர்: தஞ்சாவூரில் வாகன விதிமீறலுக்கு அபராதம் விதித்து வசூலிப்பதற்காக, இ - சலான் முறை ஞாயிற்றுக்கிழமை மாலை அறிமுகம் செய்யப்பட்டது.

பெரியகோயில் அருகே இந்த முறையை அறிமுகப்படுத்திய சரகக் காவல் துணைத் தலைவர் ஜெ. லோகநாதன், பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:
தலைக்கவசம், சீட் பெல்ட் அணியாமல் செல்வது, செல்லிடப்பேசியில் பேசிக் கொண்டே செல்வது போன்ற சாலை விதிமீறல்கள் தொடர்பாக போலீஸாரின் நோட்டீஸ் மூலமாக அபராதம் வசூலிக்கப்பட்டது. தற்போது, அடுத்த கட்டமாக இ - சலான் (மின்னணு செலுத்து சீட்டு) முறையில் அபராதம் வசூலிக்கப்படவுள்ளது. 
சாலை விதிமீறலில் ஈடுபட்டவரிடம் ஏடிஎம் அட்டையைப் பெற்று கையடக்கக் கணினியில் தேய்த்து, அபராதத் தொகை வசூலிக்கப்படும்.  இந்தக் கையடக்கக் கணினியில் வாகனப் பதிவு எண்ணைப் பதிவிடும்போது, வாகன ஓட்டுநரின் முகவரி உள்ளிட்ட விவரங்கள் கிடைத்துவிடும். இச்சாதனத்தில், தொடர்புடைய வாகனம் மீது என்னென்ன விதிமீறல்கள் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது என்ற அனைத்து விவரங்களும் வந்துவிடும். 

இந்த இ - சலான் சாதனம் தஞ்சாவூர் சரகத்தில் உள்ள 3 மாவட்டங்களிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில், தஞ்சாவூர் மாவட்டத்தில் முதல் கட்டமாக 12 இ - சலான் சாதனம் பயன்படுத்த உள்ளோம். படிப்படியாக அனைவரும் இ - சலான் முறையில் செலுத்தும் முறை கொண்டு வரப்படும். 

விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டுநரிடம் ஏடிஎம் அட்டை இல்லாவிட்டால், இணையவழி மூலம் தொடர்புடைய இணையதளத்தில் பணம் செலுத்தலாம். பணம் செலுத்தப்படாத விவரம் எங்களுக்குக் கிடைத்துவிடும். அதன் அடிப்படையில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் லோகநாதன். 
மேலும், வாகன ஓட்டுநர்களிடம் தலைகவசம், சீட் பெல்ட் அணிவது உள்ளிட்டவை தொடர்பாகக் காவல் துணைத் தலைவர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

அப்போது, நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளர் எம். ரவிச்சந்திரன், காவல் ஆய்வாளர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com