சுடச்சுட

  

  டெல்டா பாசனத்துக்கு காவிரி நீர் பயன்படுமா? முதல்வர் விளக்க வேண்டும்- இரா. முத்தரசன்

  By DIN  |   Published on : 14th August 2019 10:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காவிரி நீரை டெல்டா மாவட்டங்களுக்குப் பயன்படுத்த முடியுமா என்ற உண்மையை முதல்வர் தெரிவிக்க வேண்டும் என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் இரா. முத்தரசன்.
  தஞ்சாவூரிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலப் பொதுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற முத்தரசன்,  செய்தியாளர்களிடம் கூறியது:  மேட்டூர் அணை திறக்கப்பட்டதன் மூலம் 16 லட்சம் ஏக்கருக்கு பயன்படும் என முதல்வர் கூறியுள்ளார். ஆனால், இந்தத் தண்ணீர் டெல்டா மாவட்டங்களுக்கு முழுமையாகப் பயன்படுமா? என்ற வினாவுக்கு முதல்வர் வெளிப்படையான உண்மையைச் சொல்ல வேண்டும்.
  முக்கொம்பு கொள்ளிடம் மேலணையில் உடைப்பு ஏற்பட்டு ஓராண்டு காலமாகிறது. ஆனால், தடுப்பணைக் கட்டும் பணி இன்னும் முடிவடையவில்லை. தற்காலிகப் பணியும் ஆறு மாதங்களில் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டும், இன்னும் முடிக்கப்படவில்லை. கடந்த ஆண்டு ஏற்பட்ட உடைப்பால் 140 டி.எம்.சி. தண்ணீர் வீணாகிவிட்டது.
  ஒவ்வொரு ஆண்டும் ஜன. 28-ம் தேதி மேட்டூர் அணை மூடப்படுகிறது. பிப்ரவரி முதல் மே மாதம் வரையிலான நான்கு மாதங்களில் குடிமராமத்து பணி முழுமையாகச் செய்ய முடியும். ஆனால், தண்ணீர் திறக்கப்படவுள்ள காலத்தில் குடிமராமத்து பணி தொடங்கப்படுகிறது. தண்ணீர் வந்தவுடன் பணி நிறுத்தப்படுகிறது. போர்க்கால அடிப்படையில் குடிமராமத்து பணியை முடிக்காவிட்டால் டெல்டா மாவட்டங்களில் விவசாயம் பாதிக்கும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகக்கூடிய அபாய நிலை உள்ளது. எனவே, இப்பகுதியை வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தி தஞ்சாவூரில் செப்டம்பர் மாத மத்தியில் மாநாடு நடத்தவுள்ளோம் என்றார் முத்தரசன்.
  அப்போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் சி. சந்திரகுமார், மாவட்டச் செயலர் மு.அ. பாரதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai