காவிரி நீரை கடைமடைக்குக் கொண்டு செல்ல வலியுறுத்தல்

காவிரி நீரை கடலுக்கு விடாமல், கடைமடைப் பகுதிக்குக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக கூட்டணி கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.

காவிரி நீரை கடலுக்கு விடாமல், கடைமடைப் பகுதிக்குக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக கூட்டணி கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியரிடம் மக்களவை உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் தலைமையில் கூட்டணி கட்சியினர் செவ்வாய்க்கிழமை அளித்த மனு:
மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 100 அடியை கடந்துள்ள நிலையில், அணை திறக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் தென் மேற்குப் பருவமழை போதிய அளவுக்கு இல்லாத நிலையில் விவசாயிகள் பெரும் நெருக்கடியில் உள்ளனர். 
கர்நாடக அணைகள் நிரம்பி மேட்டூர் அணைக்கு வரும் காவிரி நீரை தஞ்சை மாவட்டப் பாசனத்துக்கு முறைப்படுத்திட தமிழகப் பொதுப் பணித் துறை ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை எடுக்கவில்லை. மேட்டூர் அணை திறக்கப்படும் நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு, மதுக்கூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, திருவோணம் உள்ளிட்ட பகுதிகளுக்குப் பாசன நீர் சென்றடைய விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஆண்டை போல கல்லணைக் கால்வாய் கரைகளில் உடைப்பு ஏற்படாமல் இருக்க கரைகளைப் பாதுகாக்க வேண்டும்.
திருவையாறு, பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள காவிரி பாசன நீர் வழித்தடங்களில் குடிமராமத்து பணிகள் முழுமையாக நடைபெறவில்லை. இதனால், விவசாயப் பணிகளுக்குப் பாசன நீர் வந்து சேருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 
மாவட்டத்தில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகள் சுமார் 50 சதவீதம் மட்டுமே நிறைவடைந்துள்ளது. சில இடங்களில் இப்பணிகள் தொடங்கப்படவில்லை. நீர் வரத்து அதிகரித்து மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ள நிலையில் குடிமராமத்து பணிகள் அவசர கோலத்தில் அள்ளித் தெளித்தது போல முடிக்கும் முயற்சி நடைபெறுகிறது. காவிரி நீரை கடை மடைப் பகுதி வரை கொண்டு செல்வதற்கும், இப்பகுதி விவசாயிகள் முழுமையாகப் பயன்படுத்தி கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர் பாசன ஆலோசனைக்கான இணை ஆணையர் தஞ்சாவூரில் முகாம் அமைத்து, கள நிலவரங்களை அறிந்து நீர் நிர்வாகத்தை அரசின் ஆலோசனையுடன் நடைமுறைப்படுத்த வேண்டும்.
மேலும், மாவட்டத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், விவசாய சங்க நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும். அக்கூட்டத்தில் முன்வைக்கப்படும் கருத்துகள் அடிப்படையில் அரசின் நடவடிக்கைகள் அமைய வேண்டும். 
தமிழக அரசு விரைவாகச் செயல்பட்டு, காவிரி நீரை கடலுக்கு அனுப்பாமல், கடைமடைக்குக் கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
அப்போது,  மாநிலங்களவை திமுக உறுப்பினர் எம். சண்முகம், திமுக மாவட்டச் செயலர்கள் துரை. சந்திரசேகரன் (தெற்கு), எஸ். கல்யாணசுந்தரம் (வடக்கு), சட்டப்பேரவை உறுப்பினர்கள் கோவி. செழியன், டி.கே.ஜி. நீலமேகம், காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் பி.ஜி. ராஜேந்திரன் (மாநகர்), டி.ஆர். லோகநாதன் (வடக்கு), இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் மு.அ. பாரதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் கோ. நீலமேகம், மதிமுக மாவட்டச் செயலர் கோ. உதயகுமார், ஐ.ஜே.கே. மேற்கு மாவட்டத் தலைவர் ச. சிமியோன் சேவியர்ராஜ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஜெய்னுலாப்தீன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com