தஞ்சாவூரில் இன்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாடு தொடக்கம்

தஞ்சாவூரில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 3 நாள் மாநில மாநாடு வியாழக்கிழமை தொடங்குகிறது.

தஞ்சாவூரில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 3 நாள் மாநில மாநாடு வியாழக்கிழமை தொடங்குகிறது.
 இதுகுறித்து தஞ்சாவூரில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலப் பொதுச் செயலர் கே. சாமுவேல்ராஜ் செய்தியாளர்களிடம் புதன்கிழமை தெரிவித்தது:
 தஞ்சாவூர் ஜெயராம் மஹாலில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மூன்றாவது மாநில மாநாடு வியாழக்கிழமை தொடங்கி தொடர்ந்து 3 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.
 திருநெல்வேலியிலிருந்து தோழர் அசோக் நினைவு சமூகநீதி சுடர், ஒசூரில் இருந்து நந்தீஸ், சுவாதி நினைவு சாதி ஆணவப் படுகொலை ஒழிப்பு சுடர், வெண்மணியில் இருந்து வெண்மணி தியாகிகள் நினைவுச் சுடர், அரியலூரில் இருந்து நந்தினி, அனிதா நினைவு கல்வி உரிமைச் சுடர், ராயமுண்டான்பட்டியில் இருந்து தோழர் என். வெங்கடாசலம் நினைவுச் சுடர் ஆகியவற்றை பெறுகிற நிகழ்வுடன் வியாழக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு மாநாடு தொடங்குகிறது. சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கே. சந்துரு மாநாட்டை தொடங்கி வைக்கிறார்.
 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே. பாலகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுபாஷினி அலி, கேரள சட்டப்பேரவை முன்னாள் தலைவர் ஆர். ராதாகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரையாற்றவுள்ளனர்.
 மாநாட்டில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சுமார் 600 பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். தமிழ்நாட்டில் சாதி ஒழிப்புக்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளன. இதைத்தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன.
 தமிழ்நாடு முழுவதும் தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராகப் போராடிய களப் போராளிகளையும், சாதிய ஆணவப்படுகொலைகள் மற்றும் சாதிய வன்கொடுமைகளால் படுகொலை செய்யப்பட்ட குடும்பங்களின் உறுப்பினர்களையும் கெளரவிக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (ஆக.16) மாலை 6 மணிக்கு நடைபெற இருக்கிறது.
 சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு சாதி ஒழிப்பு பேரணி, பொதுக் கூட்டம் நடைபெறவுள்ளது. பொதுக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி, வரவேற்பு குழுத் தலைவர் இயக்குநர் ராஜூ முருகன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் பி. சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர் என்றார் சாமுவேல்ராஜ்.
 அப்போது, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலர் சாமி. நடராஜன், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் துணைத் தலைவர் வெ. ஜீவக்குமார்,
 தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் கே. அபிமன்னன், செயலர் சின்னை. பாண்டியன், துணைத் தலைவர் என். சிவகுரு ஆகியோர் உடன் இருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com