சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள்: நீர்நிலைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு அதிகரிப்பு: கிராமசபை கூட்டத்தில் ஆட்சியர் பேச்சு

நீர்நிலைகளைப் பாதுகாப்பது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது என்றார் ஆட்சியர் ஆ. அண்ணாதுரை.

நீர்நிலைகளைப் பாதுகாப்பது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது என்றார் ஆட்சியர் ஆ. அண்ணாதுரை.
சுதந்திர தினத்தையொட்டி,  தஞ்சாவூர் அருகே வாளமிரான்கோட்டை ஊராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்துக்குத் தலைமை வகித்து ஆட்சியர் ஆ. அண்ணாதுரை பேசியது:
தமிழக முதல்வரால் குடிமராமத்து திட்டம் 3 ஆண்டுகளாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குடிமராமத்து திட்டத்தின் மூலம் கிராம மக்களின் பங்களிப்புடன் ஏரி, குளங்கள், கால்வாய்கள், வாய்க்கால்கள் போன்ற நீர்நிலைகள் தூர்வாரப்படுகின்றன. 
மத்திய அரசால் ஜல் சக்தி அபியான் என்கிற நீர் மேலாண்மை இயக்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 
தஞ்சாவூர் மாவட்டத்தில் சில கிராம மக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளைத் தாங்களே தூர்வாரி சுத்தப்படுத்துகின்றனர். நீர்நிலைகளைப் பாதுகாத்து நீரைச் சேமிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.  நீர் பாசன வசதி பெறும் விவசாயிகள் ஒன்றிணைந்து குடிமராமத்து திட்டத்தின் கீழ் தங்கள் பகுதிகளிலுள்ள நீர்நிலைகளைத் தூர்வார வேண்டும் என்றார் ஆட்சியர். இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டம், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், குடிநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துதல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம்,  மகளிர் திட்டம் என்பன உள்ளிட்ட பொருள்கள் குறித்து விவாதித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
வேளாண்மைத் துறை இணை இயக்குநர் க. நெடுஞ்செழியன்,  தஞ்சாவூர் கோட்டாட்சியர் சி. சுரேஷ், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதேபோல, மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.
புறக்கணிப்பு: பூதலூர் அருகேயுள்ள காங்கேயம்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்கக் கூடாது. காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும். 
விளைநிலங்களில் மணல் திருட்டைத் தடுக்க வேண்டும் என வலியுறுத்தும் தீர்மானங்களை மக்கள் கொண்டு வந்தனர். இதை மனுவாக கொடுக்குமாறும், தீர்மானங்களாகப் பதிவு செய்ய இயலாது எனவும் அலுவலர்கள் கூறினர். இதனால், அதிருப்தியடைந்த மக்கள் கிராமசபைக் கூட்டத்தைப் புறக்கணித்தனர்.

தஞ்சாவூரில்....
தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் வியாழக்கிழமை நடைபெற்றன.
தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாநகராட்சி ஆணையர் பு. ஜானகி ரவீந்திரன் கொடியேற்றி பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கினார்.
மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பல்வேறு இடங்களில் அதன் தலைவர் பி.ஜி. ராஜேந்திரன் கொடியேற்றினார். முன்னாள் மாவட்டத் தலைவர் நாஞ்சி கி. வரதராஜன், பொருளாளர் ஆர். பழனியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் அதன் தலைவர் து. கிருஷ்ணசாமி வாண்டையார் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, இனிப்புகள் வழங்கினார். இதில், துணைத் தலைவர் கோ. அன்பரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கரந்தை கடைத்தெருவில் நடைபெற்ற விழாவில் தஞ்சாவூர் மாவட்ட ஐஎன்டியுசி   தலைவர் கோ. ராகவேந்திரதாசன் முன்னிலையில் தொழிற்சங்க அமைப்புச் செயலர்கள் கருணாகரன், ராம்குமார், விஜயகுமார், விவேக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் 
தஞ்சாவூர் கீழவீதியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியை ஏஐடியுசி மாநிலச் செயலர் சி. சந்திரகுமார் ஏற்றினார். மாநகரச் செயலர் பி. கிருஷ்ணமூர்த்தி தலைமையில் மாவட்ட பொருளாளர் ந. பாலசுப்பிரமணியன், துணைச் செயலர் ஆர். பக்கிரிசாமி, மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் ஜி. கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூரில் தமிழ்நாடு இந்திய தேசிய ராணுவ பேரவை வாரிசமைப்பு சார்பில் நடைபெற்ற விழாவுக்கு அமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.கே.எம். வேல்சாமி தலைமை வகித்தார். முன்னாள் மக்களவை உறுப்பினர் எல். கணேசன், நிர்வாகி ஏ.ஆர். ரமேஷ், சட்ட ஆலோசகர் என். காசி விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர் லிட்டில் ஸ்காலர்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முன்னாள் கர்னல் பாஸ்கரன் பரிசு வழங்கினார். இதில், பள்ளி முதல்வர் ஏ.வி. நடனசிகாமணி, தேவிகா சிகாமணி, துணை முதல்வர் கே. சுவாமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் அதன் தலைவர் பா. பாரதிதாசன் தேசியக் கொடியை ஏற்றினார். காங்கிரஸ் பொதுக் குழு உறுப்பினர் குகநாதன் வாழ்த்துரையாற்றினார். கல்லூரிச் செயலர் சி. சுஜாதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர் அருகே ஏழுப்பட்டியில் உள்ள செயின்ட் ஜோசப் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கல்லூரி வளாகத் தலைவர் அருட்சகோதரி ஷைபி தேசியக் கொடியை ஏற்றினார். அருட்தந்தை பவுன் பாஸ், கல்லூரி நிர்வாகி அருட்சகோதரி ஆரோக்கிய ஜான்சி ராணி, கல்லூரி முதல்வர் சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர் டி.கே.ஆர். அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பள்ளி நிர்வாகக் குழுத் தலைவர் ராமநாதன் தேசியக் கொடியை ஏற்றினார். பள்ளிச் செயலர் விஜயன், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் அரசப்பன், சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர் அருகே செல்லப்பன்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பள்ளித் தலைமையாசிரியர் எஸ். தெய்வபாலன் தேசியக் கொடியை ஏற்றினார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் க. சுந்தரமூர்த்தி, ஆசிரியர்கள் இரா. சக்திவேல், த. காமராசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் துணை மருத்துவக் கண்காணிப்பாளர் பிரவீன் தேசியக் கொடியை ஏற்றினார். இதில், மருத்துவர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கும்பகோணத்தில்... கும்பகோணம் அருகே கோவிலாச்சேரியில் உள்ள அன்னை கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவுக்குக் கல்விக் குழுமச் செயலர் ஹூமாயூன் கபீர் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் எஸ்.பி. மாணிக்கவாசுகி, துணை முதல்வர்கள் சி. இளஞ்செழியன், க. ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பட்டுக்கோட்டையில்...
சுதந்திர தினத்தை முன்னிட்டு,  பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ்,  நகராட்சி அலுவலகத்தில் ஆணையர் (பொ) ந.பாஸ்கர்,  நகர காவல் நிலையத்தில் டிஎஸ்பி எஸ்.கணேசமூர்த்தி ஆகியோர் தேசியக் கொடியேற்றினர். 
நகரிலுள்ள காந்தி, காமராஜர் சிலைகளுக்கு காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  மாவட்ட  காங்கிரஸ் துணைத்தலைவர் வழக்குரைஞர் ஆர்.ராமசாமி தேசியக் கொடியேற்றினார். பட்டுக்கோட்டை கிளை  நூலகத்தில் வாசகர் வட்டத் தலைவர் ந.மணிமுத்து தேசியக் கொடியேற்றினார்.
பட்டுக்கோட்டை வள்ளலார் முதியோர் இல்லத்தில் குயின் சிட்டி லயன்ஸ் சங்கத் தலைவர் பி.ஆர்.முத்துக்குமரன் தேசியக் கொடியேற்றினார். அங்குள்ள முதியவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நாடிமுத்து நகர் நகராட்சி பூங்காவில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நகர்மன்ற முன்னாள் தலைவர் எஸ்.ஆர்.ஜவஹர்பாபு மற்றும் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கல்வி நிலையங்களில்...  பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரியில்  முதல்வர் வீ.முத்துவேலு தேசியக் கொடியேற்றினார். என்சிசி மாணவர்கள் அணிவகுப்பு நடைபெற்றது. என்எஸ்எஸ் அமைப்பு சார்பில் கல்லூரி வளாகத்தில் 50 மரக்கன்றுகள் நடப்பட்டன. ராணுவ விமானப்படை முன்னாள் அதிகாரி பிலவேந்திரன், கல்லூரி இயக்குநர் ஆர்.ஏ. மாணிக்கம் ஆகியோர் பேசினர். 
சுக்கிரன்பட்டி பிருந்தாவன் மேல்நிலைப் பள்ளியில் தாளாளர் டி.சுவாமிநாதன் தேசியக் கொடியேற்றினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.  பள்ளிச் செயலர் ஜெ.சரவணன்,  இயக்குநர்கள் எம். ராமையா,  சி.கோபாலகிருஷ்ணன், எம். ரெத்தினகுமார், எஸ்.ராஜமாணிக்கம், சி.மோகன், டாக்டர்கள் எஸ். ராமகிருஷ்ணன், பி.கே.கண்ணன், கே.பிரசன்னா, தலைமை ஆசிரியர் ஏ. முகமது அக்பர் அலி, மழலையர் பள்ளி தலைமை ஆசிரியை கெளசல்யா, சிபிஎஸ்இ பள்ளி தலைமை ஆசிரியை ஜெயசித்ரா ஆகியோர் கலந்து கொண்டனர். 
மதுக்கூரில்... மதுக்கூரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் என்.ஆர்.ரெங்கராஜன் தேசியக் கொடியேற்றினார். வட்டாரத் தலைவர் எஸ்.வி. ரவிச்சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

பேராவூரணியில்....
பேராவூரணி பேரூராட்சி அலுவலகத்தில் எம்எல்ஏ மா.கோவிந்தராசு தேசியக் கொடியேற்றி,  பேரூராட்சி பகுதியில் டிசம்பர் 31-க்குள் 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் தொடக்கமாக மரக்கன்றுகளை நகரின் பல்வேறு இடங்களில் நட்டார்.நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் மு.மணிமொழியன்,பேரூராட்சி தலைமை எழுத்தர் வி.சிவலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில்  வட்ட வழங்கல்  அலுவலர் சுகுமார் தேசிய கொடியேற்றினார். வருவாய் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 
பேராவூரணி குமரப்பா பள்ளியில் தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகள் சங்க மாநில துணைப் பொதுச் செயலாளர் ஜி.ஆர். ஸ்ரீதர் தேசிய கொடியை ஏற்றி வைத்து பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார் . ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள்  கலந்து கொண்டனர். 
பேராவூரணி வடகிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சி. கௌதமன் தேசிய கொடியேற்றினார். பள்ளித் தலைமை ஆசிரியர் சித்ராதேவி, ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். 


பாபநாசம் பகுதியில்...
பாபநாசம் எம்எல்ஏ அலுவலகத்தில் பாபநாசம் ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் கே. கோபிநாதன் தேசிய கொடியேற்றி உறுதிமொழி ஏற்றனர். 
பாபநாசம்  மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அரசினர் மாணவர் விடுதியில் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் எஸ்.மோகன் தேசிய கொடியேற்றினார். 
பாபநாசம் ஆதிதிராவிடர் நலத்துறை  அரசினர் மாணவர் விடுதியில் பாபநாசம் கூட்டுறவு நகர வங்கி தலைவர் எஸ்.சபேசன் தேசிய கொடியேற்றினார். மூன்று இடங்களிலும் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கூட்டுறவு சங்க தலைவர்  ஆர். ராஜேந்திரன், கூட்டுறவு சங்க இயக்குநர்கள் செல்வம், பாலகிருஷ்ணன்,சுரேஷ், மாணவர் விடுதி கண்காணிப்பாளர்கள் செந்தில் குமார்,கே.கதிர்வேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
பாபநாசம் வட்டாட்சியரகத்தில் வட்டாட்சியர் கண்ணன் தேசிய கொடியேற்றி, உறுதிமொழி ஏற்றார்.நிகழ்ச்சியில் மண்டல துணை வட்டாட்சியர் விநாயகம், வட்ட வழங்கல் அலுவலர் சீமான், வருவாய் அதிகாரிகள் ராஜ்குமார், மஞ்சுளா, கலையரசி மற்றும் கிராம நிர்வாக அதிகாரிகள், வருவாய்த் துறை, வட்ட வழங்கல் துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பாபநாசம் காவல் துறை அலுவலக வளாகத்தில் பாபநாசம் காவல் ஆய்வாளர் நாகரெத்தினம் தேசிய கொடியேற்றினார். நிகழ்ச்சியில் உதவி ஆய்வாளர் வேதநாயகி, தலைமை காவலர்கள், காவலர்கள்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
பாபநாசம் கிளை சிறை வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட சார்பு நீதிபதி சுதா தேசிய கொடியேற்றி, சிறை கைதிகளுக்கு இனிப்பு வழங்கினார். சிறை கைதிகளுக்கான  விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு பரிசுகள் வழங்கினார். இதில் கிளை சிறை கண்காணிப்பாளர்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பாபநாசம் பேரூராட்சி  மன்ற  வளாகத்தில் பாபநாசம் பேரூராட்சி செயல் அலுவலர் (பொறுப்பு) பொன்னுசாமி முன்னிலையில் தேசிய நல்லாசிரியர் எஸ்.கலைசெல்வன் தேசிய கொடியேற்றி  மாணவ,மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கினார். 
நிகழ்ச்சியில் துப்புரவு ஆய்வாளர் செந்தில்குமரகுரு, மேற்பார்வையாளர் நாடிமுத்து, இளநிலை உதவியாளர் மருதமுத்து, மின் பணியாளர் கரிகாலன், கணினி இயக்குநர் மணிகண்டன், மற்றும் பேரூராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பாபநாசம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) அறிவானந்தம் முன்னிலையில்,  வட்டார வளர்ச்சி அலுவலர் சாமிநாதன் தலைமை வகித்து தேசிய கொடியேற்றினார். இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய பொறியாளர்கள், அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.   
பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் பள்ளித் தலைமை ஆசிரியர் வி.மணியரசன் தலைமை வகித்து தேசிய கொடியேற்றி மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இதில் உதவி தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதேபோல்,  பாபநாசம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, திருப்பாலைத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, பாபநாசம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளிலும் சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

அலிவலம் பள்ளியில்....
பட்டுக்கோட்டை அருகேயுள்ள கொண்டிக்குளம்,  அலிவலம் எஸ்.இ.டி.வித்யாதேவி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 73ஆவது சுதந்திர தின விழா  மற்றும் பள்ளியின் 12ஆம் ஆண்டு  விளையாட்டு விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு பள்ளியின் நிர்வாக இயக்குநர்  கோவிந்தராசு தலைமை வகித்தார். பள்ளியின் தாளாளர் சித்ரா கோவிந்தராசு, அறங்காவலர் லெட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  சுதந்திர தினத்தை முன்னிட்டு, பள்ளியின் நிர்வாக இயக்குநர் எல். கோவிந்தராசு தேசிய கொடியேற்றி சிறப்புரையாற்றினார்.  விளையாட்டுப் போட்டிக்கான ஒலிம்பிக் தீபத்தை பள்ளியின் அறங்காவலர் குழுத்தலைவர் ஆர்.லெட்சுமணன் ஏற்றிவைத்து, விளையாட்டுப் போட்டிகளை தொடங்கிவைத்தார். விழாவில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.  விளையாட்டுப் போட்டிகளில் வென்ற மாணவ,  மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 
விழா ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் செய்திருந்தனர். விளையாட்டு விழாவில் சென்டாங்காடு சண்முகம்,  மூத்தகுறிச்சி பழனிவேல்,  பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, பள்ளியின் முதல்வர் ராமலிங்கம் வரவேற்றார். நிறைவில்,  பள்ளியின் துணை முதல்வர் கதிரவன் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com