சர்க்கரை ஆலையின் திடீர் அறிவிப்பு: ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஆலை ஊழியர்கள் யாரும் இனி பணிக்கு வர வேண்டாம் என அறிவித்த தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், 

ஆலை ஊழியர்கள் யாரும் இனி பணிக்கு வர வேண்டாம் என அறிவித்த தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், திருமண்டங்குடி திரு ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகத்தைக் கண்டித்து ஆலை ஊழியர்கள் சர்க்கரை  ஆலை முன் வெள்ளிக்கிழமை காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாபநாசம் அருகே திருமண்டங்குடியில் இயங்கி வரும் இந்த ஆலை நஷ்டத்தில் இயங்குவதாகக் கூறி ஆலை ஊழியர்களுக்கு கடந்த 2018 மே  முதல் 2019  ஜூலை வரை மாத ஊதியம் வழங்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை சர்க்கரை ஆலை நிர்வாகம் ஆலை நுழைவு வாயிலில் இருந்த அறிவிப்பு பலகையில் சர்க்கரை ஆலையின் நிதி நிலை சரியில்லாததால் பணியாளர்களில் 11 பேர் மட்டும் பணிக்கு வந்தால் போதும். வேறு யாரும் வர வேண்டாம் என  அறிவிப்பை  ஒட்டியிருந்தது.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் ஐ.என்.டி.யூ.சி. தொழிற்சங்கத் தலைவர் சௌந்தர்ராஜன் தலைமையில், பொதுசெயலர் கணேசமூர்த்தி,பொருளாளர் தியாகராஜன் உள்ளிட்டோர் முன்னிலையில்  ஆலையின் நுழைவு வாயில் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது  ஆலை நிர்வாகத்தைக்  கண்டித்து தொடர் முழக்கங்களை எழுப்பினர்.
தகவலறிந்து சென்ற கபிஸ்தலம் போலீஸார் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து  ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தை முடித்துக் கொண்டனர்.
இதுகுறித்து பொதுச்செயலர் கணேசமூர்த்தி கூறியது: இந்த சர்க்கரை ஆலையில் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் என 287 பேர் பணியாற்றி வந்தோம். எங்களுக்கு மாதந்தோறும் ரூ. 52 லட்சம் ஊதியம் வழங்க வேண்டும். கடந்த 16 மாதமாக ஊதியம் வழங்கவில்லை. இந்நிலையில் நிதிநிலை விரைவில் சீராகும் என ஆலை நிர்வாகத்தினர் கூறியதால், அதை நம்பி நாங்கள் தினமும்  பணிக்கு வந்த நிலையில் வெள்ளிக்கிழமை பணிக்கு வந்தபோது ஆலையின் பாதுகாவலர்கள்  எங்களை அனுமதிக்க மறுத்தனர். காரணம் கேட்டபோதுதான் அறிவிப்பு பலகையில் இதுகுறித்த விவரம் ஒட்டப்பட்டிருந்தது தெரியவந்தது. 287 பேர் வேலை பார்க்கும் ஆலையில் வெறும் 11 பேரை மட்டும் பணிக்கு வரச் சொல்வது எந்த நடைமுறையில் உள்ளது எனத் தெரியவில்லை. எனவே ஆலை நிர்வாகம் தொடர்ந்து எங்களுக்கு வேலையும் ஊதியமும் வழங்க வேண்டும்  என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com