Enable Javscript for better performance
கல்லணைக் கால்வாயில் கூடுதலாகத் தண்ணீர் திறக்க வேண்டும்: பழனிமாணிக்கம் எம்.பி வலியுறுத்தல்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    கல்லணைக் கால்வாயில் கூடுதலாகத் தண்ணீர் திறக்க வேண்டும்: பழனிமாணிக்கம் எம்.பி வலியுறுத்தல்

    By DIN  |   Published On : 25th August 2019 03:25 AM  |   Last Updated : 25th August 2019 03:25 AM  |  அ+அ அ-  |  


    கல்லணைக் கால்வாயில் கூடுதலாகத் தண்ணீர் திறக்க வேண்டும் என்றார் தஞ்சாவூர் தொகுதி மக்களவை உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம்.
    தஞ்சாவூர் அருகே கல்விராயன்பேட்டை கிராமத்தில் கல்லணைக் கால்வாயில் கடந்த ஆண்டு உடைப்பு ஏற்பட்ட இடத்தில் தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டுள்ளதை சனிக்கிழமை பார்வையிட்ட அவர், பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:
    கல்லணைக் கால்வாயில் இன்னும் 1,000 கன அடி வீதம் கூடுதலாக விடலாம். இதன் மூலம் கடைமடைப் பகுதிக்கு விரைவாகத் தண்ணீர் சென்றடைய வாய்ப்புள்ளது. 
    தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர்ந்து ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. இந்த நேரத்தை அரசு பயன்படுத்தி தண்ணீரை கடைமடைப் பகுதிக்குக் கொண்டு செல்ல வேண்டும். 
    கல்லணைக் கால்வாய், வெண்ணாறு, வெட்டாறு ஆகியவற்றில் அதிகளவில் தண்ணீர் திறந்துவிடுவதும், கொள்ளிடத்தில் குறைவாகத் திறப்பதும்தான் வழக்கம். நிகழாண்டு அந்த வரம்பை மீறி கொள்ளிடத்தில் அதிகமாகத் தண்ணீர் விடப்படுகிறது. அதாவது, வரக்கூடிய தண்ணீரில் பாதியளவு கொள்ளிடத்திலும், பாதியளவு 3 ஆறுகளில் பிரித்தும் விடப்படுகிறது. கொள்ளிடத்தில் தண்ணீர் திறக்கக் கூடாது எனக் கூறவில்லை. அதே அளவுக்கு மற்ற 3 ஆறுகளிலும் விட வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
    மேட்டூருக்கு 17,000 கன அடி வீதம் வரும் நிலையில், அணையிலிருந்து 10,000 கன அடி வீதம் திறப்பதற்குப் பதிலாக 17,000 கன அடி வீதம் திறந்துவிட வேண்டும். 
    கல்லணைக் கால்வாயில் திறக்கப்படும் ஒவ்வொரு சொட்டுத் தண்ணீரும் பயனுள்ளதாக இருக்கும். ஏறத்தாழ 8 ஆண்டுகளாகக் கடைமடைப் பகுதிக்குத் தண்ணீர் சென்றடையவில்லை. இதனால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நிகழாண்டு குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, கிடைத்துள்ள வாய்ப்பை மாவட்ட நிர்வாகம், பொதுப் பணித் துறை, வருவாய்த் துறை அலுவலர்கள் முறையாகப் பயன்படுத்த வேண்டும். 
    ஏற்கெனவே உள்ள பயிர்க் கடன்களை ரத்து செய்ய வேண்டும். மேலும், புதிய கடன்களை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். தூர்வாரும் பணியை இந்த ஆண்டு இத்துடன் நிறுத்திவிட்டு, அடுத்தாண்டு இதே நிதியைப் பயன்படுத்தலாம்.
    கல்விராயன்பேட்டையில் கடந்தாண்டு உடைப்பு ஏற்பட்ட இடத்தில் தடுப்புச் சுவர் அமைத்துள்ளனர். இந்த உயரம் போதாது. இந்தச் சுவரின் உயரத்தை மேலும் மூன்று அடிக்கு உயர்த்த வேண்டும் என்றார் பழனிமாணிக்கம்.
    அப்போது, திருவையாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், திமுக தெற்கு மாவட்டச் செயலருமான துரை. சந்திரசேகரன், தஞ்சாவூர் மேற்கு ஒன்றியச் செயலர் முரளிதரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp