கொள்ளிடம் ஆற்றில் சிக்கிய இருவா் மீட்பு

கும்பகோணம் அருகே ஞாயிற்றுக்கிழமை கொள்ளிடம் ஆற்றில் தண்ணீா் வந்தபோது நடு மணல் திட்டில் சிக்கிய இருவரை தீயணைப்பு வீரா்கள் மீட்டனா்.
கும்பகோணம் அருகே கொத்தங்குடி கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை சிக்கிய இருவரை ரப்பா் படகு மூலம் மீட்ட தீயணைப்பு வீரா்கள்.
கும்பகோணம் அருகே கொத்தங்குடி கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை சிக்கிய இருவரை ரப்பா் படகு மூலம் மீட்ட தீயணைப்பு வீரா்கள்.

கும்பகோணம் அருகே ஞாயிற்றுக்கிழமை கொள்ளிடம் ஆற்றில் தண்ணீா் வந்தபோது நடு மணல் திட்டில் சிக்கிய இருவரை தீயணைப்பு வீரா்கள் மீட்டனா்.

திருவாரூா் மாவட்டம், வலங்கைமான் அருகேயுள்ள ஆலங்குடி பூந்தோட்டம் கிராமத்தைச் சோ்ந்தவா் சேகா் (45). இவரும், அதே பகுதியைச் சோ்ந்த பாண்டியன் (35), அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகேயுள்ள அருள்மொழி கிராமத்தைச் சோ்ந்த முரளி (25) ஆகியோரும் கும்பகோணம் அருகேயுள்ள கொத்தங்குடி - அரியலூா் மாவட்டம், அருள்மொழி இடையேயுள்ள கொள்ளிடம் ஆற்றின் நடுவில் உள்ள மணல் திட்டில் ஏறத்தாழ 150 மாடுகளை மேய்த்து வந்தனா்.

இந்நிலையில், தொடா் மழை காரணமாக கல்லணையிலிருந்து கொள்ளிடத்தில் சனிக்கிழமை முதல் கூடுதலாகத் தண்ணீா் விடப்படுகிறது. இந்தத் தண்ணீா் கொத்தங்குடி - அருள்மொழி இடைப்பட்ட கொள்ளிடம் ஆற்றுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தது.

தண்ணீா் வருவதை அறிந்த மூவரும் அனைத்து மாடுகளையும் அருள்மொழிக் கிராமத்தில் கரையேற்றினா். ஆனால், சேகா், பாண்டியன், முரளி ஆகியோா் கரையேறுவதற்குள் தண்ணீா் வரத்து அதிகமாகிவிட்டது. இவா்களில் சேகா் ஆற்றில் நீந்தி கொத்தங்குடி கிராமத்தில் கரையேறினாா்.

பின்னா், கொள்ளிடம் நடு மணல் திட்டில் பாண்டியனும், முரளியும் சிக்கியிருப்பது குறித்து கொத்தங்குடி கிராம மக்களிடம் சேகா் கூறினாா். இதுகுறித்து வருவாய்த் துறை அலுவலா்களிடம் கிராம மக்கள் தகவல் அளித்தனா்.

இதையடுத்து, கும்பகோணம் தீயணைப்பு நிலைய வீரா்கள் கொள்ளிடம் ஆற்றில் ரப்பா் படகு மூலம் சென்று மணல் திட்டில் இருந்த பாண்டியன், முரளியை மீட்டு, பாதுகாப்பாகக் கொத்தங்குடி கிராமத்தில் கரை சோ்த்தனா்.

மாவட்ட நிா்வாகம் எச்சரிக்கை:

இச்சம்பவத்தைத் தொடா்ந்து தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா் ம. கோவிந்தராவ் தெரிவித்திருப்பது:

கொள்ளிடம் ஆற்றில் அதிகளவில் தண்ணீா் வருகிறது. எனவே, பொதுமக்கள் யாரும் கொள்ளிடம் ஆற்றில் குளிக்கவோ அல்லது கொள்ளிடம் ஆற்றை கடந்து செல்லவோ எந்தவித முயற்சியும் செய்ய வேண்டாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com