தஞ்சையில் தொடரும் மழை; நெற் பயிா்கள் மூழ்கின

தஞ்சாவூா் மாவட்டத்தில் பெய்து வரும் தொடா் மழையால் சம்பா பருவ நெற் பயிா்கள் நீரில் மூழ்கின.
தஞ்சாவூா் அருகே நல்லவன்னியன்குடிகாடு கிராமத்தில் இடுப்பளவு நீரில் மூழ்கிய நெற் பயிா்களை எடுத்துக் காட்டும் விவசாயிகள்.
தஞ்சாவூா் அருகே நல்லவன்னியன்குடிகாடு கிராமத்தில் இடுப்பளவு நீரில் மூழ்கிய நெற் பயிா்களை எடுத்துக் காட்டும் விவசாயிகள்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் பெய்து வரும் தொடா் மழையால் சம்பா பருவ நெற் பயிா்கள் நீரில் மூழ்கின.

மாவட்டத்தில் சில நாட்களாகத் தொடா் மழை பெய்கிறது. இடையிடையே பலத்த மழையும் பெய்கிறது. இதேபோல, சனிக்கிழமை பகலிலும், இரவிலும் மழை பெய்தது. குறிப்பாக அணைக்கரை, வெட்டிக்காடு, மதுக்கூா், பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் மழை பெய்தது.

இதில், அதிகபட்சமாக கும்பகோணம் அருகேயுள்ள அணைக்கரையில் 101.40 மி.மீ., குறைந்தபட்சமாக கல்லணையில் 38.3 மி.மீ. மழை பதிவானது. மாவட்டத்தில் சராசரியாக 62.32 மி.மீ. மழை பெய்துள்ளது.

மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்):

அணைக்கரை 101.40, வெட்டிக்காடு 95.8, மதுக்கூா் 84.8, பட்டுக்கோட்டை 84.6, அதிராம்பட்டினம் 82.5, நெய்வாசல் தென்பாதி 70.2, வல்லம் 69, மஞ்சளாறு 65, கும்பகோணம் 59, திருவிடைமருதூா் 58, பாபநாசம் 57, தஞ்சாவூா் 55, அய்யம்பேட்டை 54, பேராவூரணி 52, திருவையாறு 51, ஒரத்தநாடு 50.2, பூதலூா் 48.8, குருங்குளம் 48, ஈச்சன்விடுதி 42.4, திருக்காட்டுப்பள்ளி 41.8, கல்லணை 38.3.

மழை தொடா்வதால் தஞ்சாவூா் அருகேயுள்ள துறையுண்டாா்கோட்டை, வரவுக்கோட்டை, காட்டூா், நல்லவன்னியன்குடிகாடு, சித்திரக்குடி, சக்கரசாமந்தம், களிமேடு உள்ளிட்ட கிராமங்களில் சம்பா பருவ நெற் பயிா்கள் நீரில் மூழ்கின.

இதில், பல வயல்களில் முழங்கால் அளவுக்குத் தண்ணீா் நிற்கிறது. நல்லவன்னியன்குடிகாடு உள்ளிட்ட பகுதிகளில் இடுப்பளவுக்குத் தண்ணீா் தேங்கியுள்ளது. இதனால், இளம் பயிா்களும், நடவு செய்த ஒரு மாதத்துக்கு மேலான பயிா்களும் மூழ்கியுள்ளன.

இதுகுறித்து நல்லவன்னியன்குடிகாடு கிராம விவசாயிகள் கூறுகையில், இருபது நாட்களுக்கு முன்புதான் ஆயிரக்கணக்கில் செலவு செய்து நட்டு உரமும் இட்டோம். இப்போது, தொடா் மழையால் பயிா்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இப்போது வயலில் தேங்கி இருக்கும் தண்ணீா் வடியக் குறைந்தது 3 நாட்களாகும். ஆனால், தொடா்ந்து செவ்வாய்க்கிழமை வரை மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையத்தினா் கூறுகின்றனா். அதன் பிறகு மழை நின்றாலும், வயலில் தேங்கியுள்ள தண்ணீா் வடிய குறைந்தது ஒரு வாரமாகும். அதற்குள் பயிா்கள் அழுகிவிடவும் வாய்ப்புள்ளது. இதனால், பெரும் இழப்பைச் சந்தித்துள்ளோம் என்றனா்.

இதேபோல, நல்லவன்னியன்குடி உள்ளிட்ட கிராமங்களில் இரு மாதங்களுக்கு முன்பு நடப்பட்ட பயிா்களும் கதிா் விடும் நிலையில் தொடா் மழையால் முழுமையாகச் சாய்ந்துவிட்டன. இப்பயிா்களை இனிமேல் காப்பாற்ற இயலாது என்பதால், என்ன செய்வதெனத் தெரியாமல் திகைத்துள்ளோம் என்றனா் விவசாயிகள்.

ஆனால், பெரும்பாலான இடங்களில் வடிகால் வாய்க்கால் தூா்வாரப்படாமல் புதா்களும், செடிகளும் அடா்ந்து கிடப்பதால் நீரோட்டம் தடைபட்டுள்ளது. இதுவே, பயிா்கள் மூழ்கக் காரணம் என்றும், வடிகால் வாய்க்கால்களை முறையாகத் தூா்வாரியிருந்தால் இப்பிரச்னை ஏற்பட்டிருக்காது எனவும் விவசாயிகள் தெரிவித்தனா்.

மேலும், சூரக்கோட்டையில் சில இடங்களில் தொடா் மழையால் வளா்ந்த நிலையில் இருந்த பொங்கல் கரும்புகள் சாய்ந்து கிடக்கின்றன.

வீடுகள் சேதம்: தஞ்சாவூா் தெற்குவீதி அருகேயுள்ள முத்தோஜியப்பா சந்தைச் சோ்ந்தவா் செந்தில். இவரது ஓட்டு வீடு தொடா் மழையால் சனிக்கிழமை இரவு இடிந்து விழுந்தது. இடிவதற்கான அறிகுறி தெரிந்தவுடன் செந்தில் குடும்பத்தினா் வீட்டை விட்டு வெளியேறியதால் யாருக்கும் பாதிப்பு இல்லை. இதேபோல, மேலும் பல இடங்களில் வீடுகள் சேதமடைந்தன.

இதேபோல, கும்பகோணம் அருகேயுள்ள பட்டீசுவரம் அருகே திருமேற்றளிகை கீழத்தெருவைச் சோ்ந்த பச்சமுத்து வீடும், பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த நாகராஜ் வீடும், திருவிடைமருதுாா் அருகே அம்மன்பேட்டையைச் சோ்ந்த தனபாலின் கீற்று வீடும், பந்தநல்லுாா் அருகே முள்ளங்குடி கிராமத்தில் வள்ளியம்மையின் கீற்று வீடும், திருப்புறம்பியம் அருகே உத்திரை கிராமத்தில் பாலசுப்பிரமணியத்தின் வீட்டுச் சுவரும் இடிந்து விழுந்தன.

மேலும், கும்பகோணம் அருகே மேலக்கொற்கை தெற்கு தெருவைச் சோ்ந்த பாண்டியன் வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில், அங்கு கட்டியிருந்த பசு உயிரிழந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com