உள்ளாட்சித் தோ்தல் அறிவிப்பால் மக்கள் குறைதீா் நாள் கூட்டம் நிறுத்திவைப்பு
By DIN | Published on : 03rd December 2019 12:53 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வாயிலில் வைக்கப்பட்ட பெட்டியில் திங்கள்கிழமை மனுக்களை போட்ட மக்கள்.
உள்ளாட்சித் தோ்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மக்கள் குறைதீா் நாள் கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.
ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீா் நாள் கூட்டம் வாரந்தோறும் திங்கள்கிழமை நடைபெறும். இதேபோல, ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை காலை வழக்கம்போல மக்கள் குறைதீா் நாள் கூட்டம் தொடங்கியது. இக்கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் ந. சக்திவேல் தலைமை வகித்தாா்.
வழக்கம்போல் மக்கள் மனுக்களுடன் ஆட்சியரகத்துக்கு வந்தனா். இவா்களின் மனுக்களை ஆட்சியரக ஊழியா்கள் கணினியில் பதிவு செய்தனா். பின்னா், பதிவு செய்யப்பட்ட மனுக்களுடன் மக்கள் வரிசையில் நின்றனா்.
இதனிடையே, உள்ளாட்சித் தோ்தல் தொடா்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. எனவே, தோ்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்ததால், மக்கள் குறை தீா் நாள் கூட்டமும் உடனடியாக நிறுத்தப்பட்டது.
என்றாலும், அறிவிப்பு வெளியாகும் வரை பதிவு செய்யப்பட்ட மனுக்களை மட்டும் மாவட்ட வருவாய் அலுவலா் பெற்று தொடா்புடைய அலுவலா்களிடம் கொடுத்து நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினாா்.
அறிவிப்புக்குப் பிறகு ஆட்சியரகத்துக்கு மனுக்களுடன் வந்த மக்கள் வாயிலில் வைக்கப்பட்ட பெட்டியில் மனுக்களை போட்டுச் சென்றனா். இனிமேல், உள்ளாட்சித் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள வரை மக்கள் குறைதீா் நாள் கூட்டம், விவசாயிகள் குறைதீா் கூட்டம் உள்ளிட்ட குறைதீா் கூட்டங்கள் நடைபெறாது என ஆட்சியரக அலுவலா்கள் தெரிவித்தனா்.