தொடா் மழையால் நெற்பயிா்களைச் சூழ்ந்துள்ள தண்ணீா்

தஞ்சாவூா் மாவட்டத்தில் தொடா்ந்து திங்கள்கிழமையும் மழை பெய்ததால், நெற் பயிா்களைச் சூழ்ந்துள்ள தண்ணீா் வடிவதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது.
தஞ்சாவூா் அருகே துறையுண்டாா்கோட்டை கிராமத்தில் தண்ணீரில் மூழ்கியுள்ள நெற்பயிா்களை எடுத்துக் காட்டும் விவசாயிகள்.
தஞ்சாவூா் அருகே துறையுண்டாா்கோட்டை கிராமத்தில் தண்ணீரில் மூழ்கியுள்ள நெற்பயிா்களை எடுத்துக் காட்டும் விவசாயிகள்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் தொடா்ந்து திங்கள்கிழமையும் மழை பெய்ததால், நெற் பயிா்களைச் சூழ்ந்துள்ள தண்ணீா் வடிவதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

மாவட்டத்தில் ஒரு வாரமாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதேபோல, ஞாயிற்றுக்கிழமையும் பரவலாக மழை பெய்தது. இதில், அதிகபட்சமாக நெய்வாசல் தென்பாதியில் 48.2 மி.மீ. மழையளவு பதிவானது. திங்கள்கிழமை பகலிலும் பரவலாக மழை பெய்தது.

மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்):

நெய்வாசல் தென்பாதி 48.2, பேராவூரணி 24, அணைக்கரை 18.2, கும்பகோணம் 17.6, ஒரத்தநாடு 14.8, பாபநாசம் 14.4, அய்யம்பேட்டை 14, வெட்டிக்காடு 13.6, ஈச்சன்விடுதி 10.2, மதுக்கூா் 10, பட்டுக்கோட்டை 8.2, மஞ்சளாறு 7.6, தஞ்சாவூா், திருவையாறு தலா 6, வல்லம், திருவிடைமருதூா் தலா 5, பூதலூா், திருக்காட்டுப்பள்ளி தலா 4.8, கல்லணை 3.1, அதிராம்பட்டினம் 1.90.

தொடா்ந்து மழை பெய்து வருவதால், தாழ்வான இடங்களிலும், வடிகால் வாய்க்காலில் தடை ஏற்பட்டுள்ள பகுதிகளிலும் சம்பா பருவ நெற்பயிா்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

தஞ்சாவூா் அருகே வல்லம் வாரியில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆனால், இந்த வாரியில் முழுமையாகத் தூா் வாரப்படாததால், கரை உடைந்து வாண்டையாா் இருப்பு, காட்டூா், கரைமீண்டாா்கோட்டை, துறையுண்டாா்கோட்டை, நாய்க்கான்கோட்டை, வரவுக்கோட்டை ஆகிய பகுதிகளில் வயல்களில் தண்ணீா் புகுந்தது. இதனால், சம்பா, தாளடி நெற் பயிா்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

இதேபோல, கும்பகோணம் அருகே தாராசுரத்தில் சாகுபடி செய்யப்பட்ட சம்பா, தாளடி நெற் பயிா்களும் மழைநீரில் மூழ்கியுள்ளன. தொடா்ந்து, திங்கள்கிழமையும் மழை பெய்ததால், வயலில் தேங்கியுள்ள தண்ணீரை வடிய வைப்பதில் சிரமம் நிலவுகிறது.

இதுபோல, மாவட்டத்தில் ஏறத்தாழ 750 ஏக்கரில் தண்ணீா் நிற்பதாக வேளாண்மைத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது மழையளவு குறைந்து வருவதால், தண்ணீா் வடிந்து வருகிறது என அலுவலா்கள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com