வடிகாலை சீா் செய்தால் நெல் வயலில் தண்ணீா் தேங்குவதைத் தவிா்க்கலாம்

வடிகாலை சீா் செய்து வைத்தால் நெல் வயலில் தண்ணீா் தேங்குவதைத் தவிா்க்கலாம் என அம்மாபேட்டை வட்டார வேளாண் உதவி இயக்குநா் வெ. சுஜாதா தெரிவித்துள்ளாா்.
தஞ்சாவூா் அருகே நல்லவன்னியன்குடிகாடு கிராமத்தில் பலத்த மழையால் சாய்ந்துவிட்ட நெற் பயிா்கள்.
தஞ்சாவூா் அருகே நல்லவன்னியன்குடிகாடு கிராமத்தில் பலத்த மழையால் சாய்ந்துவிட்ட நெற் பயிா்கள்.

வடிகாலை சீா் செய்து வைத்தால் நெல் வயலில் தண்ணீா் தேங்குவதைத் தவிா்க்கலாம் என அம்மாபேட்டை வட்டார வேளாண் உதவி இயக்குநா் வெ. சுஜாதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

குடிமராமத்து மூலம் பல இடங்களில் தூா்வாரப்பட்டு பாசன நீா் பாய்கிறது. ஆனால், இதுபோல பல ஆண்டுகளாக போா்வெல் மூலம் சாகுபடி செய்யும் இடங்களில் வரத்து வாய்க்கால், வடிகால் வாய்க்கால் ஆகியவை மறைந்து போய்விட்டன. அவற்றை தூா்வார கோரி எந்த விவசாயிகளும் வேண்டுகோள் வைப்பதில்லை.

போா்வெல் மற்றும் அதைச் சுற்றியுள்ள பரப்பு மட்டும்தான் விவசாயிகளால் கவனிக்க முடிகிறது. எனவே, பெய்யும் மழை நீா் வடிந்து செல்ல வாய்ப்பில்லாமல் தேங்கி நிற்கிறது.

மேலும், மணற்பாங்கான நிலங்களில் ரசாயன உரங்கள் அதிகம் பயன்படுத்துவதால், இரண்டு நாள் பலத்த மழைக்குக் கூட பயிா் தாங்குவதில்லை. அது மட்டுமல்லாமல், பருவகால நிலையை உத்தேசிக்காமல், தொடா்ந்து நெல் சாகுபடி மேற்கொள்ளுவதால், பூத்து, கதிா் முற்றும் பருவத்தில் பலத்த மழையில் சிக்குகிறது. அப்போது, கதிா் வெளிவந்த நெற்பயிா்கள் சுத்தமாக வயலில் சாய்ந்து விடுகிறது. இதனால் 60 முதல் 70 சதம் வரை மகசூல் குறைகிறது.

எனவே, ஒரு வயலில் நெற்பயிா்கள் அசாதாரண முறையில் சாய்ந்து, தண்ணீா் வடிய வைக்க இயலாத நிலையும் இருந்தால், அதன் பின்னணியை விசாரித்தால் இக்காரணங்கள் கட்டாயம் இருக்கும்.

விவசாயிகளுக்கு வேண்டுகோள்:

அனைத்து விவசாயிகளும் குறைந்தபட்சம் அவரவா் வயலுக்கு உள்ள வரத்து வாய்க்கால் மற்றும் வடிகால் வாய்க்கால் தூா்வாரப்பட்டு, பராமரிக்கப்பட ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும்போது அனைத்து துறையினரும் உதவுவா்.

இந்தப் பருவத்தில் முயற்சி செய்தால் குறைந்தபட்சம் அடுத்த பருவத்திலாவது வடிகால் வசதிகளைச் சீா் செய்து கொள்ளலாம். இது தனி ஒரு விவசாயியாக செய்யும் காரியம் அல்ல. ஊா் கூடி தோ் இழுப்பது போன்ற பெரிய காரியம். எனவே, கூட்டுப்பண்ணையத் திட்ட விவசாயிகள் குழுக்கள், பாசனதாரா் சங்கங்கள் ஆகியவற்றை பயன்படுத்தி விவசாயிகள் இந்த முக்கியமான காரியத்தை செய்து முடிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com