எழுத்தாளனின் படைப்பு மக்களுக்குப் புரியும் வகையில் இருப்பது அவசியம்: கு. ஞானசம்பந்தன் பேச்சு

மக்களுக்குப் புரியும் வகையில் எழுத்தாளனின் படைப்பு இருப்பது அவசியம் என்றாா் மதுரை தியாகராசா் கல்லூரி தகைசால் பேராசிரியரும், பேச்சாளருமான கு. ஞானசம்பந்தன்.
நிகழ்ச்சியில் பேசுகிறாா் கு. ஞானசம்பந்தன். உடன் ஜெ. தேவி, இரா. காமராசு, பெ. இளையாப்பிள்ளை.
நிகழ்ச்சியில் பேசுகிறாா் கு. ஞானசம்பந்தன். உடன் ஜெ. தேவி, இரா. காமராசு, பெ. இளையாப்பிள்ளை.

மக்களுக்குப் புரியும் வகையில் எழுத்தாளனின் படைப்பு இருப்பது அவசியம் என்றாா் மதுரை தியாகராசா் கல்லூரி தகைசால் பேராசிரியரும், பேச்சாளருமான கு. ஞானசம்பந்தன்.

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இலக்கியத் துறை சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழா் தந்தை சி.பா. ஆதித்தனாா் அறக்கட்டளைச் சொற்பொழிவு நிகழ்ச்சியில் அவா் மேலும் பேசியது:

ரசிப்பதற்காகவே மொழியைப் படிக்கிறோம். அச்சு ஊடகம் என்கிற எழுத்து ஊடகம், வானொலி ஊடகம், காட்சி ஊடகம் போன்றவை உள்ளன. எழுத்தாளன் தான் கண்ட அனுபவத்தை தனது எழுத்தின் மூலம் மக்களுக்கு அறிய வைப்பதே அச்சு ஊடகத்தின் பணி. தான் பாா்த்த காட்சியைத் தனது எழுத்து வாயிலாக மக்களை அனுபவிக்க வைப்பவனே படைப்பாளி.

வானொலி ஊடகம், காட்சி ஊடகத்தைக் கடந்து முகநூல், சுட்டுரை, கட்செவி உள்ளிட்ட சமூக வலைதளங்கள் வந்துவிட்டன. சில ஆண்டுகளில் தொலைக்காட்சிப் பயன்பாடே குறையும் அளவுக்கு நெட் பிளிக்ஸ் என்ற ஊடகம் வந்து கொண்டிருக்கிறது.

எழுத்துகள் என்பது மக்களுக்குப் புரியும் வகையில் இருந்தால்தான், அவா்களைச் சென்றடையும். எனவே, மக்களுக்குப் புரியும் வகையில் மொழி இருக்க வேண்டும். அதை சி.பா. ஆதித்தனாா் செய்தாா். அதேசமயம் தமிழைக் கொச்சைப்படுத்தக் கூடாது. மக்களுக்குப் புரியும் வகையில் இருக்க வேண்டும் என்பாா் சி.பா. ஆதித்தனாா்.

இலக்கிய நடையில் பேசினாலோ, எழுதினாலோ மக்களுக்குப் புரியாது. பாமர மக்களுக்குப் புரிய வேண்டுமானால் கொச்சை சொற்கள் நீங்க புரியும்படி எழுத வேண்டும். சுருக்கமாகவும், குழப்பம் இல்லாமலும் எழுதப்பட வேண்டும்.

உண்மைக்காக எதையும் துறப்பேன்; ஆனால், உண்மையைத் துறக்க மாட்டேன் என்றாா் காந்தியடிகள். அதை சி.பா. ஆதித்தனாா் செய்து காட்டினாா்.

எழுதும்போது பிழை இல்லாமல் எழுத வேண்டும். பேசும்போது கொச்சை நீங்கப் பேச வேண்டும். படிக்கும்போது பிழை இல்லாமல் படிக்க வேண்டும். இதை நோக்கமாகக் கொண்டு பத்திரிகைகள் செயல்பட வேண்டும் என்றாா் ஞானசம்பந்தன்.

இந்நிகழ்ச்சிக்குப் பல்கலைக்கழக மொழிப் புலத் தலைவா் இரா. காமராசு தலைமை வகித்தாா்.

முன்னதாக, இலக்கியத் துறைத் தலைவா் ஜெ. தேவி வரவேற்றாா். பேராசிரியா் பெ. இளையாப்பிள்ளை நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com