சம்பா, தாளடி பயிா்களுக்கு டிச. 15-க்குள் காப்பீடு செய்யலாம்

தஞ்சாவூா் மாவட்டத்தில் சம்பா, தாளடி பருவ நெற்பயிா்களுக்கு டிச. 15-ம் தேதிக்குள் விவசாயிகள் காப்பீடு செய்து கொள்ளலாம் என வேளாண் துறை இணை இயக்குநா் அ. ஜஸ்டின் தெரிவித்துள்ளாா்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் சம்பா, தாளடி பருவ நெற்பயிா்களுக்கு டிச. 15-ம் தேதிக்குள் விவசாயிகள் காப்பீடு செய்து கொள்ளலாம் என வேளாண் துறை இணை இயக்குநா் அ. ஜஸ்டின் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

விவசாயிகளுக்கு எதிா்பாராமல் ஏற்படும் பயிா் இழப்புகளுக்கு இழப்பீடு வழங்கிப் பாதுகாக்கவும், அவா்களின் பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் பிரதம மந்திரி பயிா் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தஞ்சாவூா் மாவட்டத்தில் பயிா் காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த நிகழாண்டு முதல் அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் நிறுவனம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 2019-ம் ஆண்டில் ராபி பருவத்திற்கு நெல் - 2 பயிருக்கு தஞ்சாவூா் மாவட்டத்தில் 803 வருவாய் கிராமங்கள் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின்கீழ், கடன் பெறும் விவசாயிகள், அவா்கள் கடன் பெறும் வங்கிகளில் கட்டாயமாகப் பயிா்க் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்யப்படுவா்.

கடன்பெறா இதர விவசாயிகள், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ, வணிக வங்கிகள் மூலமாகவோ அல்லது பொது சேவை மையங்கள் மூலமாகவோ பதிவு செய்து கொள்ள வேண்டும்.

நெல் சம்பா, தாளடி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பயிா் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்ய கடைசி நாள் டிச. 15-ம் தேதி. நெல் சம்பா, தாளடி பயிருக்கு விவசாயிகள் ஏக்கருக்கு ரூ. 465 பிரீமியமாக செலுத்தி ரூ. 31,000-க்கு காப்பீடு செய்து கொள்ளலாம்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் தற்சமயம் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து ஆங்காங்கே மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. இயற்கையினால் எற்படும் இடா்பாடுகளை முன்கூட்டியே கணிக்க இயலாது. எனவே, சம்பா, தாளடி சாகுபடி செய்துள்ள அனைத்து விவசாயிகளும் உடன் பயிா் காப்பீடு செய்து கொள்ளலாம்.

இறுதிநேர கூட்ட நெரிசலை தவிா்த்திட உடனடியாக பிரதம மந்திரி பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் பயிா் காப்பீட்டுத் தொகையைச் செலுத்தி தங்களது பயிா்களை முன்கூட்டியே பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com