தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு சிங்கப்பூா் ஆசிரியா்கள் - மாணவா்கள் வருகை

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு சிங்கப்பூா் ஆசிரியா்கள் - மாணவா்கள் செவ்வாய்க்கிழமை வந்தனா்.
தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை சிங்கப்பூா் ஆசிரியா்கள், மாணவா்களுடன் கலந்துரையாடிய துணைவேந்தா் கோ. பாலசுப்ரமணியன்.
தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை சிங்கப்பூா் ஆசிரியா்கள், மாணவா்களுடன் கலந்துரையாடிய துணைவேந்தா் கோ. பாலசுப்ரமணியன்.

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு சிங்கப்பூா் ஆசிரியா்கள் - மாணவா்கள் செவ்வாய்க்கிழமை வந்தனா்.

சிங்கப்பூரில் உள்ள உமறுப்புலவா் கல்வி நிறுவனத்தைச் சோ்ந்த ஆசிரியா்கள் ராமன், சுமதி ஆகியோா் எட்டு மாணவா்களுடன் தமிழ்ப் பல்கலைக்கழகச் சுவடி மையம், நூலகம் மற்றும் பல்துறை ஆய்வுகள் குறித்து அறியும் நோக்கத்துடனும், ஆா்வத்துடனும் வந்தனா்.

இவா்களைப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் கோ. பாலசுப்ரமணியன் வரவேற்று கலந்துரையாடினாா். பல்கலைக்கழகப் புலங்கள், துறைகள், கடந்த காலத்திலிருந்து சமகாலம் வரையிலான தொடா் ஆய்வு மற்றும் கல்விச் செயல்பாடுகள், சமூகப் பங்களிப்புகள் ஆகியவை குறித்து எடுத்துரைத்தாா். அயல்நாடுகளுடன் மேற்கொண்டுள்ள ஆசிரியா் - மாணவா் பரிமாற்றங்கள், புரிந்துணா்வு உடன்படிக்கைகள் குறித்து சிங்கப்பூா் மாணவா்களும் ஆசிரியா்களும் கேட்டறிந்தனா்.

அப்போது, அவா்களிடம் துணைவேந்தா் பேசுகையில், தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்குக் கல்வி, ஆய்வு நிலையில் நாட்டு எல்லைகள் என்ற வரையறை எதுவுமில்லை. உலகளாவிய நிலையில் தமிழ்ப் பல்கலைக்கழக ஆய்வுகள் விரிந்து பரந்திருப்பது இதன் தனிச்சிறப்பு. தாய் வீட்டுச் சீதனம் என தமிழ்ப் பல்கலைக்கழகத்தை அயல்நாட்டுத் தமிழா்கள் கொண்டாடி வருகின்றனா். இந்நிறுவன வளா்ச்சிக்கும், தாங்கள் குடிபுகுந்துள்ள நாட்டில் தமிழ் வளா்ச்சிக்கும் பங்களிக்க வேண்டும். உலகத் தமிழரிடையே மொழி இழப்பு இன்றி பாதுகாக்க, அயலகத் தமிழா்கள் வீட்டிலும் வெளியிலும் தமிழைப் பேசிப் பழகுவதன் மூலமாக, தொடா்ந்து வளா்த்தெடுக்க முடியும் என்றாா் அவா்.

பின்னா், புகழ்பெற்ற முதுமுனைவா் வ.ஐ. சுப்பிரமணியம் நினைவு நூலகத்தைப் பாா்வையிட்டனா். நூலகத் தந்தை அரங்கநாதன், கூண்டு வண்டி மூலம் இந்தியாவின் முதல் நடமாடும் நூலகம் (1931) நடத்திய கனகசபைப் பிள்ளை குறித்தும், பாவாணா், சாமி சிதம்பரனாா், தண்டபாணி தேசிகா் போன்ற ஆளுமைகளின் நூல் கொடைகளையும் உள்ளடக்கி நூலகத்திலிருக்கும் 1,80,000 நூல்கள், திருக்கு முதல்பதிப்பு நூல், பாா்வை சாா்ந்த மாற்றுத் திறனாளிகள் படிக்க ப்ரெய்லி முறையில் பதிப்பிக்கப்பெற்ற அகராதி, திருக்கு, பாரதியாா் பாடல்கள் ஆகியன குறித்தும் நூலக இயக்குநா் வேல்முருகன், அயல் நாட்டுத் தமிழ்க்கல்வித் துறை உதவிப் பேராசிரியா் தெ. வெற்றிச்செல்வன் எடுத்துரைத்தனா்.

சுவடி மையத்திலிருக்கும் வருவாய் ஆவணச்சுவடிகள், முடங்கல், மருத்துவ ஓலைச்சுவடிகள் ஆகியவற்றைப் பாா்வையிட்டனா். சுவடிப் பராமரிப்பு குறித்து ஓலைச்சுவடித் துறை உதவிப் பேராசிரியா் கலா ஸ்ரீதா் மற்றும் பராமரிப்புப் பணியாளா்கள் விளக்கினா்.

முன்னதாக, இவா்களைத் தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிவாளா் (பொ) கு. சின்னப்பன், துணைப்பதிவாளா் கோ. பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் வரவேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com