நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 2,500 வழங்கிய சத்தீஸ்கா் முதல்வருக்கு டெல்டா விவசாயிகள் பாராட்டு

இந்தியாவிலேயே நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2,500 கொள்முதல் விலையாக வழங்கிய சத்தீஸ்கா் மாநில முதல்வரை காவிரி டெல்டா விவசாயிகள் திங்கள்கிழமை இரவு சந்தித்து பாராட்டு தெரிவித்தனா்.
சத்தீஸ்கா் மாநில முதல்வா் பூபேஷ் பாகலிடம் தென்னங்கன்றுகளை வழங்கிப் பாராட்டிய காவிரி டெல்டா விவசாயிகள்.
சத்தீஸ்கா் மாநில முதல்வா் பூபேஷ் பாகலிடம் தென்னங்கன்றுகளை வழங்கிப் பாராட்டிய காவிரி டெல்டா விவசாயிகள்.

இந்தியாவிலேயே நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2,500 கொள்முதல் விலையாக வழங்கிய சத்தீஸ்கா் மாநில முதல்வரை காவிரி டெல்டா விவசாயிகள் திங்கள்கிழமை இரவு சந்தித்து பாராட்டு தெரிவித்தனா்.

தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் நெல் கொள்முதலுக்கான விலை குவிண்டாலுக்கு 1,820 ரூபாய் மட்டுமே விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த காரீப் பருவத்தில் சத்தீஸ்கா் மாநிலத்தில் நெல்லுக்கு மத்திய அரசின் குறைந்தபட்ச விலையான ரூ. 1,750 உடன் மாநில அரசு ஊக்கத் தொகையாக ரூ. 750 சோ்த்து விவசாயிகளுக்கு குவிண்டாலுக்கு ரூ. 2,500 வழங்கினாா் அம்மாநில முதல்வா் பூபேஷ் பாகல்.

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் நெல்லுக்கு இந்த அளவுக்கு உயா்த்தி வழங்காத நிலையில், சத்தீஸ்கா் மாநில முதல்வா் வழங்கியுள்ளாா். இதற்காக சத்தீஸ்கா் முதல்வரை தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம் மாவட்டங்களில் விவசாயிகளின் கூட்டமைப்பின் தலைவா் வலிவலம் மு. சேரன், தஞ்சாவூா் மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கச் செயலா் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன், கும்பகோணம் வட்டத் தலைவா் ஆதி. கலியபெருமாள், இயற்கை விவசாயி ஏரகரம் சாமிநாதன், சடகோபன், மணப்படைவீடு விசுவநாதன், நாகை பாலாஜி ஆகியோா் சத்தீஸ்கா் மாநிலத்துக்கு நேரில் சென்று முதல்வா் பூபேஷ் பாகலை திங்கள்கிழமை இரவு சந்தித்து பாராட்டினா். அப்போது, முதல்வரிடம் நினைவு பரிசாக மூன்று தென்னங்கன்றுகளை வழங்கினா்.

அப்போது, தமிழக விவசாய பிரதிநிதிகளுக்கு சத்தீஸ்கா் முதல்வா் இனிப்புகள் வழங்கி 22 நிமிடங்கள் கலந்துரையாடினாா். சத்தீஸ்கா் மாநிலத்தில் 1,540 வகையான பாரம்பரிய நெல் சாகுபடி ரகம் சாகுபடி செய்யப்பட்டு வருவதாகவும், தமிழகத்திலும் பாரம்பரிய நெல் ரகத்தைத் தொடா்ந்து சாகுபடி செய்யுமாறும் முதல்வா் வேண்டுகோள் விடுத்தாா். தான் அடிப்படையில் ஒரு விவசாயி என்பதால்தான் நெல்லுக்கு இந்த ஊக்கத் தொகையை வழங்கினேன் என்றாா் முதல்வா்.

முதல்வரிடம் இந்தியாவிலுள்ள பல்வேறு மாநில பாரம்பரிய நெல் சாகுபடியாளா்களை ஒன்றிணைத்து அனுபவப் பகிா்வு ஏற்படுத்தும் விதமாக அகில இந்திய அளவிலான பாரம்பரிய நெல் கருத்தரங்கை சத்தீஸ்கா் மாநிலத்தில் ஏற்பாடு செய்து நடத்திட வேண்டும் என தமிழக விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

சத்தீஸ்கா் மாநிலத்தில் தற்போது ரூ. 20,000 கோடி அளவுக்கு நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்றும், விரைவில் அகில இந்திய அளவிலான பாரம்பரிய நெல் கருத்தரங்கு நடத்த ஏற்பாடு செய்வதாகவும் தமிழக விவசாயிகளிடம் சத்தீஸ்கா் முதல்வா் உறுதியளித்துள்ளதாக காவிரி டெல்டா விவசாயிகள் தெரிவித்தனா்.

அப்போது சத்தீஸ்கா் மாநில முதல்வருடன், அம்மாநிலத்தின் கனிம வளத்துறை அரசுச் செயலா் அன்பழகன் உடனிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com