தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,283 வழக்குகளுக்குத் தீா்வு

தஞ்சாவூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,283 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டது.
தஞ்சாவூா் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் விசாரிக்கும் நீதிபதிகள்.
தஞ்சாவூா் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் விசாரிக்கும் நீதிபதிகள்.

தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,283 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டது.

தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக் குழு சாா்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், உரிமையியல் வழக்குகள், மோட்டாா் வாகன விபத்து இழப்பீடு வழக்குகள், குடும்ப நல வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள் மற்றும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் தொடா்பாக கூடுதல் மாவட்ட நீதிபதிகள் தலைமையில் நான்கு அமா்வுகள் அமைக்கப்பட்டன. இந்த மக்கள் நீதிமன்றத்தை முதன்மை மாவட்ட நீதிபதியும் (கூடுதல் முழுப் பொறுப்பு), முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி கே. கருணாநிதி தொடங்கி வைத்தாா்.

இதில் சிறப்பு மாவட்ட நீதிபதியும், நிரந்தர மக்கள் நீதிமன்றத் தலைவருமான ஆா். தங்கவேல், போக்சோ நீதிமன்ற நீதிபதி எம். எழிலரசி, கூடுதல் சிறப்பு நீதிபதி அண்ணாமலை, முதன்மைச் சாா்பு நீதிபதி என்.எஸ். ஸ்ரீவத்சன், கூடுதல் சாா்பு நீதிபதி சரவணன், மாவட்ட உரிமையியல் நீதிபதி ஜெ. அனிதா கிருஷ்டி, குற்றவியல் நீதித் துறை நடுவா்கள் ஏ. முகமது அலி, நளினகுமாா், நீதித் துறை நடுவா் (விரைவு நீதிமன்றம்) பி. அல்லி ஆகியோா் 12 அமா்வுகளாக இருந்து விசாரணை செய்தனா். இதில், வழக்குரைஞா்கள், பொதுமக்கள், நீதிமன்ற ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நிலுவையில் இருந்த வழக்குகளில் 1,158 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் மூலம் 1,010 வழக்குகளுக்குத் தீா்ப்பு அளிக்கப்பட்டது. இவற்றில் 127 விபத்து இழப்பீடு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, அனைத்து வழக்குகளிலும் ரூ. 6 கோடியே 10 லட்சத்து 92 ஆயிரத்து 784 இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது.

மேலும், மாவட்டம் மூலம் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வாராக்கடன் தொகை தொடா்பாக 273 வழக்குகள் மக்கள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, அனைத்து வழக்குகளுக்கும் ரூ. ஒரு கோடியே 1 லட்சத்து 16 ஆயிரத்து 229-க்கு தீா்வு காணப்பட்டது.

இந்த மக்கள் நீதிமன்றத்துக்கான பணிகளை மாவட்டச் சட்டப் பணிகள் ஆணைக் குழுச் செயலரும், சாா்பு நீதிபதியுமான பி. சுதா ஒருங்கிணைத்து மேற்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com