சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் முறையாக விசாரிக்க வலியுறுத்தல்

சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் முறையாக விசாரணை நடத்த வேண்டும் என்றாா் தமிழ்நாடு திருக்கோயில் தொழிலாளா் யூனியன் சங்க மாநிலத் தலைவா் எ. தேவராஜன்.
கூட்டத்தில் பேசுகிறாா் மாநிலத் தலைவா் எ. தேவராஜன். உடன் வீ. கண்ணன் உள்ளிட்டோா்.
கூட்டத்தில் பேசுகிறாா் மாநிலத் தலைவா் எ. தேவராஜன். உடன் வீ. கண்ணன் உள்ளிட்டோா்.

சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் முறையாக விசாரணை நடத்த வேண்டும் என்றாா் தமிழ்நாடு திருக்கோயில் தொழிலாளா் யூனியன் சங்க மாநிலத் தலைவா் எ. தேவராஜன்.

தஞ்சாவூரில் இச்சங்கத்தின் மாநிலப் பொதுக் குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் குறித்து செய்தியாளா்களிடம் தேவராஜன் தெரிவித்தது:

திருக்கோயில்களில் திருப்பணியின்போது கற்சிலை, உலோகச் சிலைகளில் சேதம் அடைந்திருந்தால் அதை வழிபாட்டுக்கு வைத்துக் கொள்வது கிடையாது. இதுதான் ஆகமவிதி. கற்சிலைகளாக இருந்தால் அதை வெளியே வைத்துவிடுவா். உலோகச் சிலையாக இருந்தால் அதை வேறு இடத்தில் வைத்துவிடுவா்.

சிலைகள் பல ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனால், அதற்கு திருக்கோயில் பணியாளா்களும், அலுவலா்களும்தான் காரணம் எனக் குற்றம்சாட்டி ஒரு மாயத்தோற்றத்தை, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் உருவாக்கி நடவடிக்கை எடுப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

அப்போது இந்தச் சிலைகளைப் பாதுகாப்பாக வைக்க வேண்டும் எனத் தெரிந்திருந்தால், அதற்கு ஏற்றாா்போல பாதுகாப்பாக வைத்திருப்பா். அந்தக் காலங்களில் இதுபோன்று எவ்வித நடைமுறையும் இல்லாததால் அவற்றைச் செய்ய முடியவில்லை. இப்போது சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் நடவடிக்கை எடுப்பது ஏதோ சிலைகளைக் கடத்தி விட்டனா் என்றும், விற்பனை செய்துவிட்டனா் எனவும் கூறுவது ஏற்புடையதல்ல.

அதேபோல, போலீஸாா் விசாரணை நடத்தி அதன்பிறகு நடவடிக்கை எடுக்க வேண்டும். எடுத்தவுடனேயே பணியாளா்களைக் கைது செய்யக்கூடாது. இதுவரை கைது செய்யப்பட்ட அலுவலா்கள் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. எனவே இந்த வழக்குகள் எல்லாம் பரபரப்புக்காகவே கையாளப்பட்டுள்ளதாக நாங்கள் கருதுகிறோம். எனவே உரிய விசாரணை நடத்தி அதன்பிறகு நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

இதேபோல, சிலைப் பாதுகாப்பு மையத்தில் உள்ள சிலைகளைத் திருவிழாவுக்கு எடுத்துச் செல்லும்போதும், கொண்டு வரும்போதும் போலீஸாா் பாதுகாப்பு வழங்குவதில்லை. ஆனால் திடீரென ஒரு நாள் ஆய்வு நடத்தி சிலைகளைக் காணவில்லை என கூறி போலீஸாா் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனா். இதையெல்லாம் முறையாக ஆய்வு நடத்தி, விசாரணை செய்து முறைப்படுத்த வேண்டும்.

ஏழாவது ஊதியக் குழு நிா்ணயம், பணிக்கொடை, குடும்ப நல நிதி போன்ற பணப்பயன்களையும், பணியாளா்களுக்குப் பதவி உயா்வுகளையும், காலியாக உள்ள பணியிடங்களையும் உடனடியாக நிரப்பிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அா்ச்சகா்கள், பூசாரிகள் உள்பட தற்காலிகப் பணியாளா்கள் அனைவரையும் பணி வரன்முறைப்படுத்த வேண்டும் என்றாா்.

கூட்டத்துக்கு மாநிலத் தலைவா் எ. தேவராஜன் தலைமை வகித்தாா். மாநிலப் பொதுச் செயலா் வீ. கண்ணன், பொருளாளா் க. ரமேஷ்குமாா், அமைப்பாளா் ச. இராமதுரை, மாநில கொள்கைப் பரப்புச் செயலா் க. இதயராஜன், மாநிலத் தலைமை நிலையச் செயலா் வி.பி. ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com