விதிமீறல்: 91 தராசுகள், எடைக்கற்கள் பறிமுதல்
By DIN | Published On : 02nd February 2019 02:57 AM | Last Updated : 02nd February 2019 02:57 AM | அ+அ அ- |

கும்பகோணத்தில் விதிமுறைகளை மீறி மறுபரிசீலனை, மறு முத்திரை செய்யப்படாத 91 தராசுகள், எடைக் கற்களைத் தொழிலாளர் துறையினர் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.
குமப்கோணம் பேருந்து நிலையம், பாலக்கரை பகுதிகளில் உள்ள காய்கறி கடைகள், பழக்கடைகளில் தஞ்சாவூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) இர. கவிஅரசு தலைமையில் கும்பகோணம் தொழிலாளர் துணை ஆய்வாளர் வை.கு. ராஜராஜன், உதவி ஆய்வாளர்கள் ஜெ. மகாலட்சுமி, க. தேவேந்திரன், செ. சுகந்தி, முத்திரை ஆய்வாளர் சு. சரவணன் ஆகியோர் வியாழக்கிழமை 70-க்கும் அதிகமான வியாபாரிகளிடம் ஆய்வு செய்தனர்.
இதில், மறுபரிசீலனை செய்யப்படாத மின்னணு தராசுகள், மேஜை தராசுகள், விட்ட தராசுகள் 21-ம், மறுமுத்திரை இடப்படாத, போலி இரும்பு எடைக் கற்கள் 70-ம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், எடையளவு சட்டத்தின் கீழ் இரு நிறுவன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, ரூ. 10,000 அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.