சுடச்சுட

  

  திருபுவனம் கொலை சம்பவம்: அமைதி பேச்சுவார்த்தையில் இந்து அமைப்புகள் வெளிநடப்பு: இன்று கடையடைப்பு-மௌன ஊர்வலம்

  By DIN  |   Published on : 12th February 2019 08:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருபுவனம் கொலை சம்பவம் தொடர்பாக கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் பங்கேற்ற இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் வெளிநடப்பு செய்தனர்.
  கும்பகோணம் அருகேயுள்ள திருபுவனத்தில் வாடகை பாத்திரக் கடை உரிமையாளர் வ. ராமலிங்கம் (48) பிப். 5-ம் தேதி கொலை செய்யப்பட்டார். இதைக் கண்டித்து தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் செவ்வாய்க்கிழமை (பிப்.12) கடையடைப்புப் போராட்டம் நடத்துவது என இந்து அமைப்புகள், பாஜக முடிவு செய்தன.
  இதுதொடர்பாக கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கோட்டாட்சியர் வீராசாமி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலச்சந்திரன், துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் செங்கமலக்கண்ணன், ராமச்சந்திரன், வட்டாட்சியர்கள் ஜானகிராமன், ராஜேஸ்வரி, காவல் ஆய்வாளர்கள், பாஜகவினர், இந்து அமைப்பினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
  அப்போது,  கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பேசுகையில்,  ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பான விசாரணை நல்ல முறையில் போய் கொண்டிருக்கிறது. 
  எனவே இப்போது கடையடைப்பு போராட்டம் தேவையில்லை. சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றார் அவர்.
  இதை பாஜகவினர்,  இந்து அமைப்பினர் ஏற்கவில்லை. இதனால், காவல் துறையினருக்கும் இந்து அமைப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், பாஜக, இந்து அமைப்பினர் வெளிநடப்பு செய்தனர்.
  இதையடுத்து, செய்தியாளர்களிடம் பாஜக வடக்கு மாவட்டத் தலைவர் ராஜா தெரிவித்தது:
  ராமலிங்கம் கொலை செய்யப்பட்டதை கண்டித்து,  மாவட்டம் முழுவதும் செவ்வாய்க்கிழமை (பிப்.12) கடையடைப்பு நடத்த வேண்டும் என அனைத்து வணிகர் அமைப்புகளையும் சந்தித்து கேட்டுள்ளோம். மேலும்,  கும்பகோணம் காந்தி பூங்காவிலிருந்து செவ்வாய்க்கிழமை பகல் 11 மணிக்கு மெளன அஞ்சலி ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக மகாமகக் குளத்தைச் சென்றடைகிறது. 
  பாஜக தேசிய செயலர் எச். ராஜா தலைமையில் நடைபெறும் இந்த ஊர்வலத்தில் மாநிலப் பொதுச் செயலர் கருப்பு முருகானந்தம்,  இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். மேலும், பிப். 22-ம் தேதி பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கும்பகோணத்துக்கு வருகிறார். அவரது தலைமையில் ராமலிங்கம் கொலைக்கு கண்டனம் மற்றும் இரங்கல் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது என்றார் ராஜா.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai