சுடச்சுட

  

  ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைவு: உலகத் தமிழர்களுக்குப் பேரிழப்பு

  By DIN  |   Published on : 13th February 2019 09:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைவு உலகத் தமிழர்களுக்குப் பேரிழப்பு என்றார் உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன்.
  தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற ஜார்ஜ் பெர்னாண்டஸ் நினைவேந்தல் நிகழ்ச்சியில் அவர் பேசியது:
  ஈழத்தில் உள்ள வல்வெட்டித் துறையில் இந்திய அமைதிப் படை 1987 ஆம் ஆண்டில் அராஜகம் செய்ததை, அங்குள்ள பஞ்சாயத்து தலைவர் புகைப்படம் எடுத்து அனுப்பினார். அதை நாங்கள் ஜார்ஜ் பெர்னாண்டசிடம் கொடுத்தோம். அதை அவர் பல நகல்களாக எடுத்து அனைத்து தலைவர்களிடமும், தூதரகங்களிலும் கொடுத்தார். அதன் பிறகு அப்பிரச்னை சர்வதேச பிரச்னையாக மாறியது. 1997 ஆம் ஆண்டில் நடைபெற்ற மாநாட்டில் இந்திய அமைதிப் படையா? அல்லது கூலிப் படையா? என கேள்வி எழுப்பினார். அப்போது, அது சர்வதேச அளவில் பேசப்பட்டது.
  இதுபோல, ஈழத்தமிழர்களின் எத்தனையோ பிரச்னைகளுக்கு அவரால் இயன்ற அளவுக்குச் செய்து கொடுத்தார். எத்தகைய சூழ்நிலை நிலவினாலும் அனைத்து வகைகளிலும் தமிழர்களுக்கு உதவி செய்தவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ்.
  அவர் தமிழனாகப் பிறந்திருக்க வேண்டும். ஆனால், அவர் கன்னடராக மங்களூருவில் பிறந்தார். அவரைப்போல வேறு யாரும் ஈழத்தமிழர்களுக்கு உறுதுணையாக இருந்ததில்லை. ஈழத் தமிழர்களுக்குத் தனி நாடு அமைய வேண்டும் என்பதற்காக அனைத்து வகைகளிலும் அவர் உதவி செய்தார். அவர் பதவியில் இருந்தபோதும், இல்லாதபோதும் ஈழத் தமிழர்களுக்கும், நம் தமிழர்களுக்கும் தோள் கொடுத்து நின்றவர்.
  மாநிலக் கட்சிகளின் கூட்டணி உருவாவதற்கு அடித்தளம் இட்ட பெருமைக்குரியவர். மொரார்ஜி தேசாய்,  வாஜ்பாய் அமைச்சரவைகளிலும் இடம்பெற்றார். யார் பிரதமராக இருந்தாலும், யாருக்கும் அஞ்சாமல், நெஞ்சுரத்துடன் தனக்கு நியாயம் என பட்ட விஷயங்களை பேசினார்; செயலாற்றினார். அவர் தனது சுயநலத்துக்காகச் செயல்பட்டதில்லை.
  அத்தகைய மாமனிதர் கடைசி வரை நினைவு வராமல் மறைந்துவிட்டார். அவருடைய மறைவு உலகத்தில் உள்ள தமிழர்களுக்குப் பேரிழப்பு. அப்படியொருவரை இனிமேல் நாம் பார்ப்போமா என்பது சந்தேகமே? அவருக்கு அனைவரும் வீரவணக்கம் செலுத்துவோம் என்றார் நெடுமாறன்.
  மூத்தப் பத்திரிகையாளர் க. சந்திரசேகர்,  தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலர் அய்யனாபுரம் சி. முருகேசன்,  சமவெளி விவசாயிகள் இயக்கத் தலைவர் சு. பழனிராசன், புலவர் க. முருகேசன், பேராசிரியர் வி. பாரி, உலகத் தமிழர் பேரமைப்பு நிர்வாகிகள் ந.மு. தமிழ்மணி, து. குபேந்திரன், சதா. முத்துக்கிருட்டிணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai