சுடச்சுட

  

  திருபுவனம் கொலை சம்பவத்தைக் கண்டித்து கும்பகோணம் பகுதியில் கடையடைப்பு: 140 பேர் கைது

  By DIN  |   Published on : 13th February 2019 09:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருபுவனத்தில் வாடகை பாத்திரக் கடை உரிமையாளர் ராமலிங்கம் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து கும்பகோணம் பகுதியில் செவ்வாய்க்கிழமை கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது. 
  கும்பகோணம் அருகேயுள்ள திருபுவனத்தில் வாடகை பாத்திரக் கடை உரிமையாளர் வ. ராமலிங்கம் (48) கடந்த 5ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். 
  இச்சம்பவத்தைக் கண்டித்து, பாஜக,  இந்து மக்கள் கட்சி,  சிவசேனா,  விஸ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்புகள் கடையடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன. இதன்படி, கும்பகோணம்,  திருபுவனம்,  திருவிடைமருதூர் பகுதிகளில் உள்ள ஏறத்தாழ 1,600 கடைகளில் கிட்டத்தட்ட 1,400 கடைகள் செவ்வாய்க்கிழமை மூடப்பட்டன. இதனால், கும்பகோணம், திருவிடைமருதூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடை வீதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
  இதையொட்டி, கும்பகோணம் பகுதியில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ். மகேஸ்வரன் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
  இதனிடையே, இந்து அமைப்புகள் சார்பில் பாஜக வடக்கு மாவட்டத் தலைவர் ராஜா தலைமையில் கும்பகோணம் மகாமகக் குளம் வீரசைவ மடத்திலிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு காந்தி பூங்காவை நோக்கி வந்தனர். காவல் துறையினர் ஊர்வலங்கள், போராட்டங்கள் நடத்துவதற்குத் தடை விதித்திருந்த நிலையில்,  அதை மீறி ஊர்வலமாக வந்ததாகக் கூறி நாகேசுவரன் கோயில் வடக்கு வீதியில் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால், ஊர்வலத்தில் வந்தவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவர்களை போலீஸார் கைது செய்தனர்.
  தவிர, இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன்சம்பத் திருபுவனத்துக்குச் சென்று ராமலிங்கம் குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அங்கிருந்து கும்பகோணத்துக்கு தனது ஆதரவாளர்களுடன் வந்தபோது,  அவரை செட்டிமண்டபம் அருகே போலீஸார் வழிமறித்து கைது செய்தனர். இந்த இரு இடங்களிலும் ஏறத்தாழ 140 பேர் கைது செய்யப்பட்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai