டெல்டா மாவட்டங்களில் பிப். 21 முதல் பரப்புரை இயக்கம்: காவிரி உரிமை மீட்புக் குழு முடிவு

காவிரியில் மாத வாரியாகத் தண்ணீர் திறக்க வலியுறுத்தி டெல்டா மாவட்டங்களில் பிப். 21-ம் தேதி முதல்

காவிரியில் மாத வாரியாகத் தண்ணீர் திறக்க வலியுறுத்தி டெல்டா மாவட்டங்களில் பிப். 21-ம் தேதி முதல் பரப்புரை இயக்கம் நடத்துவது என காவிரி உரிமை மீட்புக் குழு முடிவு செய்துள்ளது.
தஞ்சாவூரில் இக்குழுவின் கூட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.
காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்குமுறைக் குழுவுக்கு முழுநேரப் பணிப் பொறுப்புள்ள அலுவலர்களை உடனடியாக மத்திய அரசு அமர்த்த வேண்டும். வெள்ளக்காலத்தில் கர்நாடகத்திலும், தமிழ்நாட்டிலும் தேக்கி வைக்க முடியாத மிகை நீர் வெளியேறி கடலில் கலந்துவிட்டது. அந்தக் கடல் நீரைக் கர்நாடகம் தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய உரிமை நீர் கணக்கில் சேர்க்கக் கூடாது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி கடந்த அக்டோபர் (22 டி.எம்.சி.), நவம்பர் (15 டி.எம்.சி.), டிசம்பர் (8 டி.எம்.சி.), 2019 ஜனவரி (3 டி.எம்.சி.), பிப்ரவரி (2.5 டி.எம்.சி.) ஆகிய மாதங்களுக்குக் கர்நாடகம் திறந்துவிட வேண்டிய 50.4 டி.எம்.சி தண்ணீரை உடனடியாகத் திறந்துவிட கர்நாடகத்துக்கு மத்திய அரசு கட்டளையிட வேண்டும்.
தமிழ்நாடு அரசு இந்த 50.5 டி.எம்.சி. தண்ணீரைப் பெற எல்லா முயற்சிகளும் எடுத்து, மத்திய அரசை வற்புறுத்த வேண்டும்.
மேக்கேதாட்டில் கர்நாடகம் அணை கட்டினால் ஒரு சொட்டு நீர் கூட மேட்டூர் அணைக்கு வராது. கர்நாடக அரசு மேக்கேதாட்டில் அணை கட்டுவதற்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும். 
இதை வலியுறுத்தியும், வாழ்வுரிமை காக்க தமிழ் மக்கள் திரள வேண்டுமென்றும் வேண்டுகோள் வைத்தும் பிப். 21 முதல் மார்ச் 10-ம் தேதி வரை காவிரி டெல்டா மாவட்டங்களில் கருத்துப் பரப்புரை இயக்கம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
குழுப் பொருளாளர் த. மணிமொழியன் தலைமை வகித்தார். குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன், தமிழர் தேசிய முன்னணி திருவாரூர் மாவட்டத் தலைவர் 
இலரா. பாரதிசெல்வன், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சித் தலைவர் குடந்தை அரசன்,  இந்திய ஜனநாயகக் கட்சி மேற்கு மாவட்டத் தலைவர் ச. சிமியோன் சேவியர்ராஜ்,  தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஜெகதீசன்,  தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் பழ. ராசேந்திரன்,  மனிதநேய ஜனநாயகக் கட்சி மாவட்டச் செயலாளர் அகமது கபீர்,  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநகரத் தலைவர் ஜெயினுலாப்தீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com