கஜா புயல் பாதிப்பு நிவாரணம் கோரி குருவிக்கரம்பையில் காத்திருப்புப் போராட்டம்
By DIN | Published On : 14th February 2019 08:46 AM | Last Updated : 14th February 2019 08:46 AM | அ+அ அ- |

பேராவூரணி அருகே உள்ள குருவிக்கரம்பையில் புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், விவசாயிகள் நிவாரணம் கேட்டு புதன்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேராவூரணி அருகே கஜா புயலால் பாதிக்கப்பட்ட குருவிக்கரம்பை, பாலச்சேரிக்காடு, கங்காதரபுரம், மருங்கப்பள்ளம், முனுமாக்காடு, நாடாகாடு, வாத்தலைக்காடு, நாடியம், கரம்பக்காடு மற்றும் சுற்று வட்டார கிராமங்கள் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு முறையாக நிவாரணம் வழங்கப்படவில்லையாம்.
இதை கண்டித்து, குருவிக்கரம்பையில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டபோது அனுமதி மறுக்கப்பட்டதாம். இதனால், குருவிக்கரம்பை மடத்துவாசல் பகுதியில் புதன்கிழமை கொட்டகைப்பந்தல் அமைத்து காலை 9 மணி முதல் கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிற்பகல் ஆனபோதும் பேச்சுவார்த்தைக்கு அதிகாரிகள் யாரும் வராததால், பாத்திரங்களை கொண்டு வந்து அடுப்பு மூட்டி, அங்கேயே சமைத்து போராட்டக்காரர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இதையடுத்து மாலையில் சம்பவ இடத்துக்கு வந்த பேராவூரணி மண்டல துணை வட்டாட்சியர் யுவராஜ், குருவிக்கரம்பை சரக வருவாய் ஆய்வாளர் ஜோதி, கிராம நிர்வாக அலுவலர் மருததுரை மற்றும் காவல்துறை ஆய்வாளர் பரமானந்தம் ஆகியோர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில், பேராவூரணி வட்டத்தில் புயலால் வீடுகள் சேதமடைந்த சுமார் 3 ஆயிரம் குடும்பங்களுக்கு நிதி ஒதுக்கீடு கேட்டு, ஆட்சியருக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது; பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு, வேளாண் துறை மூலம் கணக்கெடுப்பு செய்துள்ளபடி இரண்டாவது கட்டமாக விரைவில் நிவாரணம் வங்கிக் கணக்கில் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது; மேலும், ஒரு வாரத்தில் பிரச்னைகள் சரி செய்யப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து, போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.