விவசாயி கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை
By DIN | Published On : 14th February 2019 08:45 AM | Last Updated : 14th February 2019 08:45 AM | அ+அ அ- |

விவசாயி கொல்லப்பட்ட வழக்கில் இளைஞருக்கு தஞ்சாவூர் நீதிமன்றம் புதன்கிழமை ஆயுள் சிறை தண்டனை விதித்தது.
தஞ்சாவூர் அருகே குலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் குழந்தைசாமி (60). விவசாயி. இவரது தம்பி சந்தானத்தின் மகன் சூசைமாணிக்கம் அதே கிராமத்தில் ஊராட்சிக்குச் சொந்தமான தென்னை மரங்களை ஏலத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு எடுத்தார்.
இந்நிலையில், 2015, ஜூலை 15-ம் தேதி அப்பகுதியில் குழந்தைசாமி மற்றவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, சூசைமாணிக்கம் ஏலத்தில் எடுத்த தென்னை மரங்களில் காய்க்கும் காய்களை தான்தான் பறிப்பேன் என அதே கிராமத்தைச் சேர்ந்த காமராஜ் மகன் ரஞ்சித்குமார் (32) கூறினாராம். இதை குழந்தைசாமி தட்டிக் கேட்டார்.
இதனால், குழந்தைசாமிக்கும், ரஞ்சித்குமாருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது, குழந்தைசாமியை ரஞ்சித்குமார் கட்டையால் தாக்கினார். இதில், பலத்தக் காயமடைந்த குழந்தைசாமி தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு உயிரிழந்தார்.
இதுகுறித்து தாலுகா போலீஸார் வழக்குப்பதிந்து, ரஞ்சித்குமாரை கைது செய்தனர். இதுதொடர்பாக தஞ்சாவூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி வி. சிவஞானம் விசாரித்து ரஞ்சித்குமாருக்கு ஆயுள் சிறை தண்டனையும், ரூ. 1,000 அபராதமும் விதித்து புதன்கிழமை தீர்ப்பளித்தார்.