பாபநாசத்தில் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 20th February 2019 09:04 AM | Last Updated : 20th February 2019 09:04 AM | அ+அ அ- |

பாபநாசத்தில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாபநாசத்தில் சாலியமங்கலம் பிரதான சாலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இந்தக் கடையால் மாணவர்கள், பொதுமக்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பல்வேறு இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.
எனவே, இந்தக் கடையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி, கும்பகோணம் ஜோதிமலை திருப்பணி சிவனடியார் திருக்கூட்டம் அமைப்பின் நிறுவனர் திருவடிக்குடில் சுவாமிகள் தலைமையில் டாஸ்மாக் கடை முன்பு செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், ஐஎன்டியூசி மாவட்டத் தலைவர் ஆர்.தில்லைவனம், முன்னாள் சிறைத்துறை அதிகாரி உமாபதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர் சாமு.தர்மராஜ், சமூக ஆர்வலர்கள் சாய்பிரசாத், தனபால் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் இந்தக் கடையை உடனடியாக அகற்றாவிட்டால் , இப்பகுதி பொதுமக்கள் ஒன்று திரண்டு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவர் என ஆர்ப்பாட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.