முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்
ஈராண்டு சாதனை சிறப்புப் புகைப்படக் கண்காட்சி
By DIN | Published On : 28th February 2019 10:48 AM | Last Updated : 28th February 2019 10:48 AM | அ+அ அ- |

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் செய்தி - மக்கள் தொடர்புத் துறை சார்பில் தமிழக அரசின் ஈராண்டு சாதனைகள் குறித்த சிறப்பு புகைப்பட கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவியேற்று இரு ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி நடைபெற்ற இக்கண்காட்சியை வேளாண்மைத் துறை அமைச்சர் இரா. துரைக்கண்ணு திறந்து வைத்தார். இதில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் படங்கள், தமிழக அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள், கஜா புயல் பாதிப்பின்போது தமிழக அரசால் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட நிவாரணப் பணிகள் உள்ளிட்ட படங்கள் இடம்பெற்றன.
மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பில் 17 மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகள் மற்றும் பயனாளிகளுக்கு ரூ. 98,500 மதிப்பில் தையல் இயந்திரங்கள், ப்ரெய்லி கடிகாரங்கள், உருப்பெருக்கிகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள், அம்மா இரு சக்கர வாகன திட்டத்தின் கீழ் 8 பேருக்கு ரூ. 2 லட்சம் மானியம், முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து ஒருவருக்கு ரூ. 3 லட்சத்துக்கான காசோலை, வேளாண்மைத் துறை சார்பில் இருவருக்கு ரூ. 1,200 மானியத்தில் கைத்தெளிப்பான்கள் என மொத்தம் 28 பேருக்கு சுமார் ரூ. 6 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், ஊரக வளர்ச்சித் துறை சார்பில் 10 பேருக்கு இளநிலை உதவியாளர், தட்டச்சர் பணிகளுக்கான ஆணைகளையும் அமைச்சர் வழங்கினார்.
ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் ஆர். வைத்திலிங்கம், பட்டுக்கோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சி.வி. சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.