முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்
"குத்துவிளக்கை ஏற்றுமதி செய்தால் அந்நிய செலாவணியை ஈட்ட முடியும்'
By DIN | Published On : 28th February 2019 10:48 AM | Last Updated : 28th February 2019 10:48 AM | அ+அ அ- |

குத்துவிளக்கை ஏற்றுமதி செய்தால் அந்நிய செலாவணியை ஈட்ட முடியும் என்றார் மத்திய கைவினைப் பொருட்கள் துறையின் உதவி இயக்குநர் எஸ். வினோத்குமார்.
கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குத்துவிளக்குக்குப் புவிசார் குறியீடு பெற்றது குறித்த விழிப்புணர்வு கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:
நாச்சியார்கோவிலில் தயாரிக்கப்படும் குத்துவிளக்குக்குப் புவிசார் குறியீடு 5 ஆண்டுகளுக்கு முன்பு பெறப்பட்டது. இந்தச் சான்றிதழை ஒவ்வொரு உற்பத்தியாளரும் தனித்தனியாக விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். தற்போது கணினி வழியாகச் சந்தைப்படுத்துவதற்காக ஜெம் போர்ட்டல் என்ற தளம் உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து பொருட்களையும் இருந்த இடத்தில் இருந்தே விற்பனை செய்ய முடியும். இந்தியாவில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களுக்குத் தேவையான நாச்சியார்கோவில் குத்துவிளக்கை விற்பனை செய்யலாம். தஞ்சாவூர் மாவட்டத்தைவிட, திருப்பூர் பகுதி முன்னொரு காலத்தில் பின்தங்கி இருந்தது. ஆனால், இன்று அந்த மாவட்டத்தில் பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டு அந்நிய செலாவணி ஈட்டப்படுகிறது.
இதேபோல, நம்முடைய குத்துவிளக்கையும் நாம் ஏற்றுமதி செய்து அந்நிய செலாவணியை ஈட்ட உற்பத்தியாளர்கள் முன்வர வேண்டும். யாரும் இடைத்தரகர்களை நம்ப வேண்டாம். இதேபோல எந்த ஒரு பொருளையும் ரசீது இல்லாமல் விற்பனை செய்ய வேண்டாம். குத்துவிளக்கை ஏற்றுமதி செய்து அந்நிய செலாவணி ஈட்டினால், இந்தப் பகுதியும் மற்ற பகுதிகளைப் போல் வளர்ச்சியை பெற முடியும் என்றார் வினோத்குமார். இக்கூட்டத்தில் நாச்சியார்கோவில் குத்துவிளக்கு உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத் தலைவர் சுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.