முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்
"பாசிசத்துக்கு எதிரான மக்கள் கட்டமைப்புத் தேவை'
By DIN | Published On : 28th February 2019 10:45 AM | Last Updated : 28th February 2019 10:45 AM | அ+அ அ- |

பாசிசத்துக்கு எதிரான மக்கள் கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் சி. மகேந்திரன்.
தஞ்சாவூரில் அனைத்து இடதுசாரி கட்சிகள் சார்பில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற மதவெறி பாசிச சக்திகளை முறியடிக்க அணி திரள்வோம் என்கிற கருத்தரங்கத்தில் அவர் மேலும் பேசியது: ஆட்சி அதிகாரத்தில் இந்துத்துவா எவ்வாறு ஊடுருவியுள்ளது. அதை எவ்வாறு அகற்ற வேண்டும் என நாம் திட்டமிட வேண்டும். தேர்தலுக்காக மட்டும் இணைவதல்ல நமது நோக்கம். சமூக மாற்றங்களுக்காகவும், மக்கள் வளர்ச்சிக்காகவும் நம்முடைய அணி சேர்க்கை இருக்க வேண்டும். இடதுசாரிகள் ஒற்றுமைதான் பாசிசத்தை எதிர்க்கும் பேராயுதமாக இருக்கும்.
இணக்கம் வேண்டும். இணக்கம் இல்லாமல் பாசிசத்தை அழிக்க முடியாது. பாசிசத்துக்கு எதிரான மக்கள் கட்டமைப்பை உருவாக்க வேண்டும். நாடாளுமன்ற, சட்டப்பேரவையில் நாம் இடம்பெறாத வகையில் கார்ப்பரேட் கும்பல் சதி திட்டம் தீட்டுகிறது. நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் அர்ப்பணிப்பு உணர்வோடு நாம் ஒன்றிணைய வேண்டும். பாசிச கட்டமைப்பை எதிர்க்கக்கூடிய வகையில் சரியான கட்டமைப்பை நாம் உருவாக்க வேண்டும் என்றார் மகேந்திரன். இக்கருத்தரங்கத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் கோ. நீலமேகம் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு உறுப்பினர் கே. சாமுவேல்ராஜ், மகஇக மாநில இணைச் செயலர் காளியப்பன், சிபி (எம்எல்) மக்கள் விடுதலை பொதுச் செயலர் ஜெ. சிதம்பரநாதன், தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ-மாவோ சிந்தனை) பொதுச் செயலர் பாலன் ஆகியோர் கருத்துரையாற்றினர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டப் பொருளாளர் என். பாலசுப்பிரமணியன், சிபிஐ (எம்.எல்) லிபரேசன் மாவட்ட நிர்வாகக் குழு கே. ராஜன், மகஇக ராவணன், சிபி(எம்எல்) மக்கள் விடுதலை மாவட்டச் செயலர் இரா. அருணாசலம், தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ-மாவோ சிந்தனை) மாவட்டச் செயலர் அருண்சோரி, ஏஐடியுசி மாநிலச் செயலர் சி.சந்திரகுமார், ஒருங்கிணைப்பாளர் துரை. மதிவாணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.