சிலை கடத்தல் வழக்கு: கிரண் ராவ் ஆஜர்
By DIN | Published On : 04th January 2019 08:42 AM | Last Updated : 04th January 2019 08:42 AM | அ+அ அ- |

சிலை கடத்தல் வழக்குத் தொடர்பாக தொழிலதிபர் கிரண் ராவ் கும்பகோணம் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜரானார்.
சென்னை கோபாலபுரத்தைச் சேர்ந்தவர் தொழிலதிபர் கிரண் ராவ் (54). இவரது வீட்டில் சில மாதங்களுக்கு முன்பு உலோகம் மற்றும் கற்சிலைகள் நிலத்தடியில் புதைத்து வைக்கப்பட்டிருந்ததைத் தமிழகச் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் கண்டுபிடித்து கைப்பற்றினர்.
இச்சிலைகள் குறித்து விளக்கம் தர வேண்டும் என கிரண்ராவ்க்கு போலீஸார் நோட்டீஸ் அனுப்பினர். ஆனால் கிரண்ராவ் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனிடையே, சென்னை உயர்நீதிமன்றத்தில் கிரண்ராவ் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.
இம்மனுவை விசாரித்த நீதிமன்றம் நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கி, திருச்சியில் உள்ள சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் நாள்தோறும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனவும், மேலும், வழக்கு நடைபெறும் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் டிச. 21-ம் தேதி உத்தரவிட்டது.
இதன்படி, கிரண் ராவ் கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜராகி திருக்கருக்காவூர் மாளிகைத் திடலைத் சேர்ந்த இருவரை ஜாமீன்தாரர்களாகவும், மேலும் ரூ. 1 லட்சம் ஜாமீன் தொகைக்கான பத்திரத்தையும் வழங்கினார்.