பிளாஸ்டிக் பாட்டிலுக்கு பதிலாக சில்வர் பாட்டில்
By DIN | Published On : 04th January 2019 08:42 AM | Last Updated : 04th January 2019 08:42 AM | அ+அ அ- |

தஞ்சாவூரில் உள்ள பள்ளியில் மாணவிகளுக்கு பிளாஸ்டிக் பாட்டிலுக்கு பதிலாக சில்வர் பாட்டில் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
பிளாஸ்டிக் பயன்பாட்டுக்குத் தமிழக அரசுத் தடை விதித்துள்ளது. இந்நிலையில், தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளாஸ்டிக் பாட்டில் பயன்பாட்டைத் தவிர்ப்பதற்காக சில்வர் பாட்டில் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இப்பள்ளியில் மாணவிகளுக்கு பள்ளி ஆசிரியர்கள் பிளாஸ்டிக் பாட்டில் வடிவில் உள்ள சில்வர் பாட்டில்களை குறைந்த விலையில் வாங்கிக் கொடுத்து வருகின்றனர்.
இப்பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவிகளுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் பி. சாந்தா, சில்வர் பாட்டில்களை வழங்கினார். மேலும், இயன்ற அளவுக்கு பிளாஸ்டிக்கை முற்றிலும் தவிர்த்து பிளாஸ்டிக் இல்லா மாசற்ற, தூய்மையான சமுதாயத்தை உருவாக்குவோம் என உறுதி ஏற்கப்பட்டது.
இதுகுறித்து இப்பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்தது: தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி பிளாஸ்டிக் மாசில்லா தமிழகத்தை உருவாக்கும் விதமாக இப்பள்ளியில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக பிளாஸ்டிக் பாட்டில்களுக்குப் பதிலாக சில்வர் பாட்டில்களைப் பள்ளியிலேயே குறைந்த விலையில் வாங்கி மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக வாங்குவதால் விலையும் குறைவாக இருக்கிறது என்றனர் ஆசிரியர்கள்.