சுடச்சுட

  

  புயலால் பொங்கல் கரும்பு விளைச்சல் பாதிப்பு: விவசாயிகளுக்கு இழப்பு

  By DIN  |   Published on : 12th January 2019 07:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தஞ்சாவூர் மாவட்டத்தில் கஜா புயலால் பொங்கல் கரும்பு விளைச்சல் பாதிக்கப்பட்டதன் காரணமாக விவசாயிகளுக்குப் பேரிழப்பு ஏற்பட்டுள்ளது.
  மாவட்டத்தில் திருப்பனந்தாள், திருவையாறு, அம்மாபேட்டை, பாபநாசம், பூதலூர் ஆகிய வட்டாரங்களில் ஏறத்தாழ 200 ஏக்கர் பரப்பளவில் பொங்கல் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் மூன்று நாள்களே உள்ள நிலையில் அறுவடைப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, வளர்ச்சிப் பருவத்தில் கரும்புகள் இருந்த நிலையில்,  நவம்பர் மாதத்தில் கஜா புயல் வீசியது. இதனால், பெரும்பாலான கரும்புகள் சாய்ந்தன. இதன் பிறகு விவசாயிகள் கூடுதலாகச் செலவு செய்து,  சாய்ந்த கரும்புகளை நிமிர்த்தி 3 அல்லது 4 கரும்புகளைக் கட்டி வைத்து தண்ணீர் பாய்ச்சினர். இதற்காக ஏக்கருக்கு கூடுதலாக சுமார் ரூ. 15,000 செலவானது என விவசாயிகள் கூறினர். என்றாலும், வளர்ச்சி பாதிக்கப்பட்டு,  உயரம் குறைந்துவிட்டது.
  இயல்பாக 8 அடி முதல் 10 அடி உயரத்துக்கு கரும்புகள் வளரும். ஆனால், புயலால் கரும்புகள் சாய்ந்துவிட்டதால், ஏறத்தாழ 6 அடி அளவுக்குத்தான் வளர்ந்துள்ளன.  மேலும்,  மீண்டும் நிமிர்த்தி வைத்து கட்டப்பட்டதில் பாதி அளவுக்குத்தான் தேறியது என்கின்றனர் விவசாயிகள்.
  இதுகுறித்து சூரக்கோட்டையைச் சேர்ந்த கரும்பு விவசாயி ஆர். அண்ணாதுரை தெரிவித்தது:
  சாதாரணமாக ஒரு ஏக்கருக்கு 30,000 கரும்புகள் கிடைக்கும். ஆனால், புயல் பாதிப்பால் ஏக்கருக்கு 15,000 கரும்புகள்தான் கிடைக்கின்றன. கரும்பு வளர்ச்சி குறைவாக இருப்பதால்,  வியாபாரிகளும் வாங்க முன்வருவதில்லை. கடந்த ஆண்டு ஒரு கரும்பு ரூ. 15 முதல் ரூ. 16 வீதத்துக்கு வியாபாரிகள் வாங்கிச் சென்றனர். இப்போது, ஒரு கரும்பு ரூ. 12 அல்லது ரூ. 13-க்குத்தான் விலை போகிறது. இதனால், ஏக்கருக்கு ரூ. 3 லட்சம் முதல் ரூ. 4 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது என்றார் அண்ணாதுரை.


  உழைத்தும் பயனில்லை...
  பத்து மாதங்கள் பாடுபட்டு, செலவு செய்து சாகுபடி செய்யப்பட்ட நிலையில் இறுதி கட்டத்தில் புயல் வீசியதால் ஆண்டு முழுவதும் உழைத்தும் பயனில்லாமல் போய்விட்டது என விவசாயிகள் கூறுகின்றனர்.
   அரசு நிவாரணம் வழங்கினால்தான் இப்பாதிப்பிலிருந்து மீள முடியும். இதுகுறித்து அரசு அலுவலர்களிடம் பலமுறை மனுக்கள் அளித்தும் இதுவரை நிவாரணம் கிடைக்கவில்லை என்று விவசாயிகள் அதிருப்தியுடன் கூறினர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai