சுடச்சுட

  


  டாஸ்மாக் ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றார் டாஸ்மாக் ஊழியர் சங்க மாநிலப் பொதுச் செயலர் கே. திருச்செல்வன்.
  தஞ்சாவூரில் சனிக்கிழமை நடைபெற்ற தஞ்சை மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் 12-வது ஆண்டு பேரவைக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:
  டாஸ்மாக் நிறுவனத்தில் 15 ஆண்டுகள் பணியாற்றுபவர்களைப் பணி நிரந்தரம் செய்து, அரசு ஊழியர்களுக்கு இணையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறோம். இதை அரசு நிறைவேற்றாமல், குறைந்த ஊதியத்தை வழங்கி, உழைப்பைச் சுரண்டி வருகிறது. 
  தமிழகத்தில் உச்ச நீதிமன்ற ஆணைப்படி 3,300 மதுக்கடைகளும், மாநில அரசின் கொள்கை முடிவுப்படி படிப்படியாக ஏறத்தாழ 1,000 கடைகளும் மூடப்பட்டன. உச்ச நீதிமன்ற ஆணைப்படி மூடப்பட்ட கடைகளில் பல ஊர் எல்லைக்கு அப்பால் திறக்கப்பட்டன. ஆனால், மூடப்பட்ட கடைகளில் பணியாற்றிய பணியாளர்களுக்கு முறையான மாற்றுப் பணி வழங்கப்படவில்லை. இவர்களுக்கு அரசுத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களில் கல்வித் தகுதிக்கு ஏற்ப பணி வழங்க வேண்டும்.
  ஊர் எல்லைக்கு அப்பால் திறக்கப்பட்ட கடைகளில் பணியாற்றும் பணியாளர்களிடம் சமூக விரோதிகள் பணம் கொள்ளையடித்து செல்கின்றனர். எனவே, பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கவும், கடைகளில் கண்காணிப்பு கேமரா, அபாய சங்கு பொருத்தவும், நவீன பணப் பெட்டகம் அமைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  டாஸ்மாக் கடைகளில் காலி அட்டைப் பெட்டிகளை நிர்வாகமே எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பெட்டிகளை ஊழியர்களே விற்றுப் பணம் செலுத்த வேண்டும் என்ற முறையைக் கைவிட வேண்டும். டாஸ்மாக் ஊழியர்களுக்குப் பொது பணியிட மாறுதல் முறையை அமல்படுத்த வேண்டும். 
  இவை உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் கடையடைப்பு, வேலைநிறுத்தம் போன்ற போராட்டங்கள் நடத்தப்படும் நிலை ஏற்படும் என்றார் திருச்செல்வன்.
  கூட்டத்தில் சிஐடியு மாவட்டச் செயலர் சி. ஜெயபால், தலைவர் து. கோவிந்தராஜீ, துணைச் செயலர் கே. அன்பு, முறைசாரா தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் பி.என். பேர்நீதி ஆழ்வார், சங்கத்தின் மாவட்டச் செயலர் க. வீரையன், ஜெ. ரமேஷ், பொருளாளர் க. மதியழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai