சுடச்சுட

  

  புள்ளமங்கை சிவன் கோயிலில் தொல்லியல் துறையினர் ஆய்வு

  By DIN  |   Published on : 13th January 2019 03:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், புள்ளமங்கை கிராமத்திலுள்ள பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் தொல்லியல் துறையினர் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
  மிக பழைமையானதும், பல்வேறு பெருமைகள் கொண்டதுமான இக்கோயிலில் சிறியது முதல் பெரியது வரையிலான சிவன், விஷ்ணுவின் புராதன சிற்பங்கள் மற்றும் ஆடல் மகளிர், இசைக் குழுவினர் உள்ளிட்ட எண்ணற்ற சிற்பங்கள் மிகுந்த கலை நயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  உலகெங்கிலும் இருந்து வரலாற்று ஆய்வாளர்களும், ஆர்வலர்களும் இக்கோயிலுக்கு வந்து கோயிலிலுள்ள சிற்பங்களை கண்டு வியக்கின்றனர். சிற்பக் கலைகளின் கூடமாக திகழும் இக்கோயிலை இயற்கை இடர்பாடுகளிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்று வரலாற்று ஆய்வாளர்களும், ஆர்வலர்களும் தொல்லியல் துறைக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
  இந்நிலையில், தொல்லியல் துறையின் சென்னை மண்டல கண்காணிப்பாளர் சுப்ரமணியம் தலைமையிலான 5 பேர் கொண்ட ஆய்வுக்குழுவினர் வெள்ளிக்கிழமை புள்ளமங்கை கோயிலில் ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து தொல்லியல் துறையின் சென்னை மண்டல கண்காணிப்பாளர் சுப்ரமணியம் கூறியது: 
  இந்தக் கோயில் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் வரும்போது, கோயிலை பழைமை மாறாமல் பராமரித்து பாதுகாப்பது மட்டுமே தொல்லியல் துறையின் பணியாகும். வழிபாடு, ஆகம விதிகள், திருவிழாக்கள் போன்றவற்றில் தொல்லியல் துறையின் தலையீடு இருக்காது; இதுகுறித்து கிராம மக்கள் தீர்மானம் நிறைவேற்றி தொல்லியல் துறைக்கு அனுப்பினால் கோயிலை தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றார். 
  முன்னதாக குழுவினரின் ஆய்வின்போது, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரும், வரலாற்று ஆய்வாளருமான அய்யம்பேட்டை என். செல்வராஜ், சோழர் வரலாற்று ஆய்வு சங்கத்தை சேர்ந்த சுவாமிநாதன், நடராஜன் உள்ளிட்டோர் கோயில் வரலாறையும், சிறப்புகளையும் கோயிலின் தற்போதைய நிலையையும் தொல்லியல் துறையின் ஆய்வுக் குழுவினரிடம் விளக்கி கூறினர்.
  இந்த நிகழ்ச்சியில், வருவாய்த் துறை உதவியாளர் பாஸ்கரன், கோயில் அர்ச்சகர் முத்துகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai