சுடச்சுட

  

  மின் சீரமைப்புப் பணியின்போது காயமடைந்த தொழிலாளர் தீவிர சிகிச்சை மூலம் மீட்பு

  By DIN  |   Published on : 13th January 2019 03:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  கஜா புயல் பாதிப்புக்குப் பிறகு மின் கம்பம் சீரமைப்புப் பணியில் ஈடுபட்டபோது கீழே விழுந்து பலத்தக் காயமடைந்த தொழிலாளர் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்குப் பிறகு மீட்கப்பட்டார்.
  புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகேயுள்ள காட்டு நாவல் கிராமத்தில் கஜா புயலால் சாய்ந்துவிட்ட மின் கம்பங்களை மீண்டும் நட்டு சீரமைக்கும் பணி டிசம்பர் முதல் வாரத்தில் நடைபெற்றது. இப்பணியில் ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம், வெலட்டூரைச் சேர்ந்த வீரையா (45) ஈடுபட்டார். இவர் டிச. 2-ம் தேதி 25 அடி உயர மின் கம்பத்தின் மேல் பகுதியில் சீர் செய்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாகக் கீழே விழுந்தார். இதில், பலத்தக் காயமடைந்த இவர் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள் நோயாளியாகச் சேர்க்கப்பட்டார். அங்கு இவர் மூளை நரம்பியல் அறுவை சிகிச்சைத் துறைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. 
  இதுகுறித்து தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் குமுதா லிங்கராஜ் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தது:
  வீரையா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தார். அவருக்கு சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்து பார்த்ததில் அவரது மூளையும், தண்டுவடமும் இணையும் இடத்தில் எலும்பு உடைந்து, முகுளத்தில் (மூளைத்தண்டு) பாதிப்பு ஏற்பட்டிருந்தது தெரிய வந்தது. மேலும், அவருக்குக் கழுத்துக்குக் கீழே உணர்வு குறைவாகவும், இரண்டு கை, கால்கள் செயல்பாடு குறைவாகவும் இருந்தன. இவருக்குத் தனி கவனத்துடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் மூலம் வீரையாவுக்கு கை, கால்கள் செயல்பாடு குறைகள் நீங்கி, தற்போது நல்ல நடமாட்டத்துடனும், சுய சுவாசத்துடனும் சிறந்த முன்னேற்றம் அடைந்துள்ளார். எனவே, வீரையா சனிக்கிழமை மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டார். தனியார் பெருநிறுவன மருத்துவமனைகளை விட இம்மருத்துவமனையில் இதுபோன்ற சிகிச்சைகள் சிறப்பாக அளிக்கப்படுகின்றன என்றார் குமுதா லிங்கராஜ்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai