ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி ஜன. 26-இல் உண்ணாவிரதம்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி திருக்காரவாசலில் ஜன. 26-ம் தேதி நான்கு மாவட்ட

ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி திருக்காரவாசலில் ஜன. 26-ம் தேதி நான்கு மாவட்ட விவசாயிகள் பங்கேற்கும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படவுள்ளது என்றார் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன்.
தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவர் தெரிவித்தது:
தஞ்சாவூர், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பேரழிவை ஏற்படுத்தும் 244 கி.மீ. சுற்றளவுக்கு திருக்காரவாசல் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்காக வேதாந்தா நிறுவனத்துக்கு மத்திய அரசு அளித்துள்ள அனுமதியைக் கைவிட்டு, காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும். இதை வலியுறுத்தி திருவாரூர் அருகேயுள்ள திருக்காரவாசலில் நான்கு மாவட்ட விவசாயிகள் பங்கேற்கும் உண்ணாவிரதப் போராட்டம் குடியரசு தினமான ஜன. 26-ம் தேதி நடைபெற உள்ளது.
மேக்கேதாட்டு விவகாரத்தில் அணைக் கட்ட அனுமதி கொடுக்கவில்லை. ஆய்வுக்குத்தான் அனுமதி கொடுத்துள்ளோம் என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் கூறுவது மோசடி நடவடிக்கை.  இதை நீதிமன்றத்தில் தமிழக அரசு ஆதாரத்துடன் எடுத்துக் கூறி ஆய்வுக்கான அனுமதியை ரத்து செய்ய முயற்சிக்க வேண்டும்.
வாட்டாள் நாகராஜுக்கு கண்டனம்: கர்நாடகத்தைச் சேர்ந்த வாட்டாள் நாகராஜ்,  விவசாயிகள் சங்கத் தலைவர் என்ற போர்வையில் மேக்கேதாட்டுவில் அணைக் கட்டுவதைத் தமிழகம் தடுத்தால் கர்நாடகத் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்ற தொனியில் மறைமுகமாக மிரட்டல் விடுத்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம். இதுகுறித்து மத்திய அரசும், கர்நாடக அரசும் தனது நிலையைத் தெளிவுப்படுத்த வேண்டும். கர்நாடகத் தமிழர்களின் பாதுகாப்புக்கு இரு அரசுகளுமே பொறுப்பேற்க வேண்டும்.
வாட்டாள் நாகராஜ் மிரட்டலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரிய முறையில் மத்திய அரசின் உள் துறை அமைச்சகத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்று,  அவர் மீது தேச விரோத வழக்கின் கீழ் நடவடிக்கை எடுத்து கர்நாடகத் தமிழர்களைப் பாதுகாக்க விரைந்து நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்றார் பாண்டியன்.
அப்போது, தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் த. புண்ணியமூர்த்தி,  கெளரவத் தலைவர் திருப்பதி வாண்டையார்,  மாவட்டத் தலைவர் துரை. பாஸ்கரன், செயலர் எம். மணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com