பசுபதிகோவிலில் சுற்றுலாப் பொங்கல்: வெளிநாட்டுப் பயணிகள் பங்கேற்பு

தஞ்சாவூர் அருகே பசுபதிகோவில் கிராமத்தில் தமிழக  சுற்றுலாத் துறை சார்பில் புதன்கிழமை நடைபெற்ற

தஞ்சாவூர் அருகே பசுபதிகோவில் கிராமத்தில் தமிழக  சுற்றுலாத் துறை சார்பில் புதன்கிழமை நடைபெற்ற சுற்றுலாப் பொங்கல் விழாவில் வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் பங்கேற்று கொண்டாடினர்.
இவ்விழாவில், பிரிட்டன், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, நெதர்லாந்து  நாடுகளைச் சேர்ந்த ஏறத்தாழ 40 பேர் பங்கேற்றனர். இவர்களுக்குத் தமிழ்ப் பாரம்பரிய முறைப்படி மாலையிட்டு, நெற்றியில் திலகமிட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், பிரதான சாலையிலிருந்து மாட்டு வண்டியில் விளையாட்டுத் திடலுக்கு அழைத்து செல்லப்பட்டனர். தொடர்ந்து, உள்ளூர் பெண்களுடன் இணைந்து பொங்கல் வைக்கும் பணியில் வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் சிலர் ஈடுபட்டனர்.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளான கபடி, உறியடி, வழுக்கு மரம் ஏறும் போட்டி, கோலப் போட்டி உள்ளிட்டவற்றை சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டனர்.
 மேலும், மேடையில் கோலாட்டம், புலியாட்டம், சிலம்பாட்டம், தப்பாட்டம், மயிலாட்டம், காளையாட்டம், காளியாட்டம், பரதநாட்டியம் உள்ளிட்ட நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பூம்புகார் நிறுவனம் உள்ளிட்டவை சார்பில் கைவினைப்பொருட்கள் காட்சிக்காக வைக்கப்பட்டன. 
சுற்றுலாப் பொங்கல் விழா குறித்து  ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிறிஸ் கில்டிங் தெரிவித்தது: இது, மிகவும் மகிழ்ச்சிகரமான கொண்டாட்டமாக உள்ளது. எங்களது நாட்டில் இதுபோன்ற திருவிழா இல்லை. இதுபோல வேறு எங்கும் பார்த்ததில்லை என்றார் அவர்.
பிரிட்டனைச்  சேர்ந்த ஜேன் தெரிவித்தது: மிகச் சிறந்த இத்திருவிழாவில் மகிழ்ச்சியுடன் அன்பைப் பரிமாறிக் கொண்டு கொண்டாடுகின்றனர். இங்குள்ள மக்கள் மிகவும் நட்பு ரீதியாகப் பழகுகின்றனர். இது எங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. தமிழக மக்களை நாங்கள் மிகவும் நேசிக்கிறோம் என்றார் அவர்.
மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், வேளாண் துறை அமைச்சர் இரா. துரைக்கண்ணு, மாநிலங்களவை உறுப்பினர் ஆர். வைத்திலிங்கம், மயிலாடுதுறை தொகுதி மக்களவை உறுப்பினர் ஆர்.கே. பாரதிமோகன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ். மகேஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com