வழங்கப்படாத நிலுவைத் தொகை: கருப்புப் பொங்கலாக அனுசரித்த கரும்பு விவசாயிகள்

தஞ்சாவூர் அருகே குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில், கரும்புக்கான நிலுவைத் தொகை

தஞ்சாவூர் அருகே குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில், கரும்புக்கான நிலுவைத் தொகை வழங்கப்படாததைக் கண்டித்து, ஆலை முன்பு செவ்வாய்க்கிழமை கரும்பு விவசாயிகள் கருப்புப் பொங்கலாக அனுசரித்து முழக்கங்கள் எழுப்பினர்.
இதில், கரும்பு விவசாயிகள் சட்டையில் கருப்புப் பட்டை அணிந்து, கையில் கரும்புகளை ஏந்தி, பொங்கல் பானைகளை வைத்து பங்கேற்றனர்.
 இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தெரிவித்தது: கரும்பு விவசாயிகளுக்கு உற்பத்தி செலவு பல மடங்கு அதிகரித்துள்ளதால், டன்னுக்கு ரூ. 4,000 விலை நிர்ணயிக்க வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் கரும்பு விவசாயிகளுக்கு அரசு நிர்ணயித்த டன்னுக்கு ரூ. 2,750-இல் ரூ. 450 வீதம் ஆலை நிர்வாகங்கள் கொடுக்காமல் ஏறத்தாழ ரூ. 1,000 கோடி நிலுவை வைத்துள்ளன.
இதில், குருங்குளம் சர்க்கரை ஆலையில் மட்டும் ஒவ்வொரு விவசாயிக்கும் டன்னுக்கு ரூ. 450 வீதம் இரு ஆண்டுகளாக ரூ. 900 வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. நிகழாண்டில் வழங்க வேண்டிய ரூ. 450-ஐ சேர்த்தால், நிலுவைத் தொகையின் அளவு ரூ. 1,350 ஆக அதிகரிக்கிறது. இந்த வகையில் குருங்குளம் சர்க்கரை ஆலையில் விவசாயிகளுக்கு ரூ. 30 கோடி அளவுக்கு நிலுவைத் தொகை வழங்க வேண்டும். ஆலை நிர்வாகம் நிலுவைத் தொகையை வழங்காததால் பொங்கல் திருவிழாவைக் கொண்டாட முடியாத நிலையில் உள்ளோம். இதைக் கண்டித்து பொங்கல் பண்டிகையைப் புறக்கணிக்கும் விதமாக இப்போராட்டத்தில் ஈடுபட்டோம். இந்நிலைமை நீடித்தால் ஆலை முன்பு  தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.
இதில், குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை விவசாயிகள் சங்கத் தலைவர் பி. ராமசாமி, கரும்பு உற்பத்தியாளர் சங்கத் தலைவர் பி. கோவிந்தராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com