தென்னை விவசாயிகளுக்கு இதுவரை ரூ. 339 கோடி நிவாரணத் தொகை பட்டுவாடா
By DIN | Published On : 24th January 2019 11:20 AM | Last Updated : 24th January 2019 11:20 AM | அ+அ அ- |

தஞ்சாவூர் மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு இதுவரை ரூ. 339.32 கோடி நிவாரண உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது என ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது: மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்குத் தமிழ்நாடு முதல்வரின் ஆணைப்படி, நிவாரண உதவித் தொகையாக ரூ. 495.82 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதில், இதுவரை ரூ. 339.32 கோடி இழப்பீட்டு நிவாரண உதவித்தொகை பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. தஞ்சாவூர் வட்டத்தில் 31 கிராமங்களைச் சேர்ந்த 642 பேருக்கு ரூ. 89.27 லட்சமும், திருவையாறு வட்டத்தில் 4 கிராமங்களைச் சேர்ந்த 20 பேருக்கு ரூ. 55,000-ம், ஒரத்தநாடு வட்டத்தில் 117 கிராமங்களைச் சேர்ந்த 10,310 பேருக்கு ரூ. 72.33 கோடியும், பட்டுக்கோட்டை வட்டத்தில் 175 கிராமங்களைச் சேர்ந்த 26,660 பேருக்கு ரூ. 214.38 கோடியும், பேராவூரணி வட்டத்தில் 90 கிராமங்களைச் சேர்ந்த 9,124 பேருக்கு ரூ. 51.57 கோடியும், பாபநாசம் வட்டத்தில் 50 கிராமங்களைச் சேர்ந்த 319 பேருக்கு ரூ. 12.73 லட்சமும், கும்பகோணம் வட்டத்தில் 11 கிராமங்களைச் சேர்ந்த 45 பேருக்கு ரூ. 1.59 லட்சமும் என மொத்தம் 478 கிராமங்களைச் சேர்ந்த 47,120 தென்னை விவசாயிகளுக்கு ரூ. 339.32 கோடி இழப்பீட்டு நிவாரண உதவித்தொகை அவர்களுடைய வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.