ராகு கோயில் நிர்வாகத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்: 28 பேர் கைது
By DIN | Published On : 24th January 2019 11:19 AM | Last Updated : 24th January 2019 11:19 AM | அ+அ அ- |

கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேசுவரம் ராகு கோயில் நிர்வாகத்தைக் கண்டித்து இந்து மக்கள் கட்சியினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, கோயில் அலுவலர்களுக்கு அல்வா கொடுக்க முயன்றதாக 28 பேரை போலீஸார் கைது செய்தனர்.
திருநாகேசுவரம் ராகு கோயிலில் பால் அபிஷேகம் செய்வதற்குப் பக்தர்களிடம் ரூ.100, ரூ. 500 என கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அபிஷேகம் முடிந்து வெளியே வரும் பக்தர்களுக்குத் தேங்காய், பழம், கற்கண்டு, திராட்சை, பால் ஆகியவை வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில், சில மாதங்களாகப் பாலுக்கு பதில் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.
இதுகுறித்து அறநிலையத்துறை அலுவலர்களிடம் மீண்டும் பழைய பாரம்பரிய முறைப்படி பால் வழங்குமாறு இந்து மக்கள் கட்சியினர் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், அதை மாற்றாததால் அச்செயலைக் கண்டித்து கோயில் முன் இந்து மக்கள் கட்சியினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அக்கட்சியின் மாநில இளைஞரணி பொதுச் செயலர் டி. குருமூர்த்தி தலைமையில் பலர் கலந்து கொண்டனர். கோயில் நிர்வாகத்தைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பிய இவர்கள் கோயில் அலுவலர்களுக்கு அல்வா கொடுக்க முயன்றனர். இதுதொடர்பாக 28 பேரை போலீஸார் கைது செய்தனர்.