வேலைநிறுத்தம்: ஆசிரியர்களான கிராம மக்கள்!
By DIN | Published On : 24th January 2019 11:17 AM | Last Updated : 24th January 2019 11:17 AM | அ+அ அ- |

பேராவூரணி அருகே வேலைநிறுத்த போராட்டம் காரணமாக ஆசிரியர்கள் பணிக்கு வராமல், பள்ளியை பூட்டிவிட்டு சென்றதால் கிராம மக்களே ஆசிரியர்களாகி மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகின்றனர்.
பேராவூரணி அருகே பெரியநாயகிபுரம் ஊராட்சி, துலுக்கவிடுதி வடக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இங்கு மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்துவதற்காக பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் அண்மையில் புதிய திட்டம் அறிவித்தனர். இதன்படி, இப்பள்ளியில் புதிதாக சேரும் மாணவர்களுக்கு ஒரு கிராம் தங்க நாணயமும், பெற்றோர்களுக்கு ஊக்கத் தொகையாக ஆயிரம் ரூபாயும் வழங்கி மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தினர்.
இந்நிலையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தால் இப்பள்ளியை பூட்டிவிட்டு சென்ற ஆசிரியர்கள் கடந்த இரண்டு நாள்களாக பணிக்கு வரவில்லை. இதனால், மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட கூடாதென முடிவு செய்த பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், கிராமத்தில் உள்ள பட்டதாரி இளஞர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களை ஒன்று சேர்த்து பள்ளியின் வராந்தாவில் மாணவர்களை அமரவைத்து வகுப்பை நடத்தினர். அனைத்து மாணவர்களும் பள்ளிக்கு வந்திருந்து பாடங்களை படித்தனர்.
இதுகுறித்து பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் எம்.பிரகலாதன் கூறியது: வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக ஆசிரியர்கள் யாரும் பணிக்கு வரவில்லை. இதனால், மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட கூடாதென பட்டதாரிகளை கொண்டு வகுப்பறைகளை நடத்தி வருகிறோம். ஆசிரியர்கள் போராட்டம் முடித்து பணிக்கு திரும்ப வரும் வரை இந்த வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படும். பள்ளி விடுமுறை என்று வீட்டில் இருக்காமல், அனைத்து மாணவர்களும் பள்ளிக்கு வந்தது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என்றார்.