சிகாகோ மாநாடு தமிழர்களிடம் புதிய சிந்தனையை உருவாக்கும்: சி. மகேந்திரன் பேச்சு
By DIN | Published On : 01st July 2019 08:44 AM | Last Updated : 01st July 2019 08:44 AM | அ+அ அ- |

சிகாகோவில் நடைபெறவுள்ள உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு தமிழர்களிடம் அறிவுபூர்வமான புதிய சிந்தனையை உருவாக்கும் என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினரும், தாமரை இதழ் ஆசிரியருமான சி. மகேந்திரன்.
சிகாகோ மாநாட்டில் பங்கேற்கவுள்ள மகேந்திரனுக்கு தஞ்சாவூரில் தமிழ் அமைப்புகள் சார்பில் பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. இதில், மகேந்திரன் ஏற்புரையில் பேசியது:
சிகாகோவில் ஜூலை 4 முதல் 7-ம் தேதி வரை 10-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இதுவரை 9 மாநாடு நடைபெற்றுள்ளது. முதல் மாநாட்டை நடத்தியவர் தனிநாயகம் அடிகள். இதன் பிறகு எல்லா மாநாடுகளும் தமிழக அரசின் பொருளாதார உதவியுடனும், முழுப் பொறுப்புடனும் நடைபெற்றது.
ஆனால், இப்போது சிகாகோ மாநாட்டைத் தமிழ் அறிஞர்களும், அந்த அமைப்பைச் சார்ந்தவர்களுமே நடத்துகின்றனர். இதற்கு பெரிய பொருட்செலவு ஏற்படுகிறது. இந்தப் பொறுப்பை எல்லாம் வட அமெரிக்க தமிழ்ச் சங்கம் ஏற்றுள்ளது. இதேபோல, அமெரிக்காவில் இருக்கக்கூடிய பல்வேறு தமிழ் அமைப்புகள் அதற்கான நிதியுதவி செய்கின்றன. ஆர்வலர்கள் ஒன்று கூடி இந்த நெருக்கடியான நேரத்தில் தமிழின் தனித்துவத்தை உலகில் நிலைநிறுத்த வேண்டும் என்ற முயற்சியோடு இந்த மாநாட்டை நடத்துகின்றனர்.
கீழடி ஆய்வை மூடி மறைப்பதற்கு எல்லா விதமான முயற்சிகளும் நடைபெறுகிறது. இந்த நேரத்தில்தான் சிகாகோவில் நடைபெறவுள்ள மாநாட்டில் இரு முக்கியமான விஷயங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடக்கக்கூடிய குமரிக் கண்டம் தொடர்பான முழு ஆய்வு குறித்து பேசப்படவுள்ளது. இதேபோல, தமிழ் இனம் தொன்மையான இனம் என்பது குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.
மாநாட்டில், தமிழர்களின் மூத்த அறிவுக் கோட்பாடு என்ற ஆய்வு அறிக்கையை அளிக்க உள்ளேன். இந்த மாநாடு அறிவுபூர்வமான சிந்தனையைத் தமிழர்களிடம் உருவாக்கும். தமிழ்நாட்டின் நிலம், நீர் என அனைத்தும் பிரச்னையாக இருக்கிறது. நம் மொழிக்கும், வாழ்க்கைக்கும், புவிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில் தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும் என்கிற அரசியல் உணர்வையும் இந்த மாநாடு முன்வைக்கிறது என்றார் மகேந்திரன்.
இந்த விழாவுக்கு முன்னாள் அமைச்சர் சி.நா.மீ. உபயதுல்லா தலைமை வகித்தார். உலகத் திருக்குறள் பேரவைச் செயலர் பழ. மாறவர்மன், தமிழ்ப் பல்கலைக்கழக நாட்டுப்புறவியல் துறைத் தலைவர் இரா. காமராசு, முனைவர் சண்முக. செல்வகணபதி, ந.மு.வே. நாட்டார் திருவருள் கல்லூரிச் செயலர் இரா. கலியபெருமாள், வெற்றி தமிழர் பேரவை ஆசிப் அலி, ம. வேலு மாவலியார், வழக்குரைஞர் மு.அ. பாரதி, பேராசிரியர் வி. பாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.