ஹைட்ரோ கார்பன் திட்டம்: தேர்தல் வாக்குறுதியை அதிமுக அரசு காப்பாற்ற வேண்டும்
By DIN | Published On : 01st July 2019 08:45 AM | Last Updated : 01st July 2019 08:45 AM | அ+அ அ- |

ஹைட்ரோ கார்பன் குறித்து தேர்தலின்போது அளித்த வாக்குறுதியை அதிமுக அரசுக் காப்பாற்ற வேண்டும் என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் சி. மகேந்திரன்.
தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தது:
ஹைட்ரோ கார்பனை பொருத்தவரை மத்திய, மாநில அரசுகள் இரண்டுமே காவிரி வடிநில மக்களிடம் விளையாடுகின்றனர். வாக்குகள் கேட்கும்போது ஹைட்ரோ கார்பன் திட்டம் இல்லை எனக் கூறுகின்றனர். வாக்குகளைப் பெற்ற பிறகு, அமல்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கின்றனர். மக்களிடம் அரசு நேரடியாக ஏமாற்றினால், யார் என்ன செய்ய முடியும். தேர்தல் அறிக்கையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிடுவோம் எனக் குறிப்பிட்டுள்ளனர். சொன்ன சொல்லைக் காப்பாற்ற வேண்டிய கடமை அதிமுக அரசிடம் இருக்கிறது.
மீத்தேன் திட்டத்தை வேண்டாம் என ஜெயலலிதா கையெழுத்திட்டார். இப்போது, ஜெயலலிதாவின் பெயரில் ஆட்சி நடத்துபவர்கள் அதை எதிர்த்துக் கேட்பதற்குத் தயங்குகின்றனர். இதற்கான விளக்கத்தை அரசு சொல்ல வேண்டும். தமிழ்நாட்டில் இத்திட்டத்தை அனுமதிக்க முடியாது என தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி, கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டும். ஆனால், அதற்கு பதிலாக அதிகாரிகளை வைத்து மக்களை மிரட்டுகின்றனர். இந்த மிரட்டலை காவிரி டெல்டா மக்கள் நேருக்கு நேர் நின்று சந்திப்பர்.
தமிழ்நாட்டில் மிக மோசமான குடிநீர் பஞ்சம் நிலவுகிறது. இதைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை (ஜூலை 2) அனைத்து மாவட்டங்களிலும் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் நடத்துகிறது.
ஒரே நாடு, ஒரே தலைவர் மோடி, சர்வாதிகாரம் என்பதைக் கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ளது. இது நாட்டுக்கு நல்லதல்ல. அடிப்படையில் நம் தேசம் பன்முகத் தன்மைக் கொண்டது. வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான் நம் நாடு. இதில், கை வைத்தால் ஆபத்து என்றார் மகேந்திரன்.
அப்போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் மு.அ. பாரதி, மாநகரச் செயலர் பி. கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.