சுடச்சுட

  

  அக்னி ஆற்றில் தடுப்பணை கட்டும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்: கிராம வளர்ச்சிக் கூட்டத்தில் தீர்மானம்

  By DIN  |   Published on : 02nd July 2019 09:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நடப்பு ஆண்டில் அக்னி ஆற்றில் தடுப்பணை கட்டும் திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
  பட்டுக்கோட்டையை அடுத்த மகிழங்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற கிராம வளர்ச்சிக்  கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  தீர்மான விவரம்:  ரூ. 10 கோடியில் அக்னி ஆற்றில் தடுப்பணை கட்டும் திட்டத்துக்கான மதிப்பீடு வரைவுப் பட்டியல் தயார் நிலையில் உள்ளது. அதை செயல்படுத்துமாறு பரிந்துரை செய்து தமிழக முதல்வருக்கு பட்டுக்கோட்டை எம்எல்ஏ  சி.வி.சேகர் கடந்த 18.9.2018-ல் கடிதம் அனுப்பியுள்ளார்.  ஆனால், அந்த திட்டம் இதுவரை செயல்படுத்தப்படவில்லை. எனவே, அக்னி ஆற்றில் தடுப்பணை கட்டும்  திட்டத்தை நிகழாண்டிலேயே நிறைவேற்றி தருமாறு, மீண்டும் பட்டுக்கோட்டை  எம்எல்ஏ  மூலம் தமிழக முதல்வரிடம் வலியுறுத்துவது.
  சட்டவிரோதமாக மகிழங்கோட்டை அக்னி ஆற்றில் மணல் திருடுவதை தடுத்து நடவடிக்கை எடுக்கும் வருவாய்த்துறை, காவல்துறை, கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு கிராம மக்கள் முழு ஒத்துழைப்பு அளிப்பது. மகிழங்கோட்டை  கிராமத்தின் மையப் பகுதியில் உள்ள பெரமனாங்குளம், மண்குளம், முதலியார்குளம் ஆகிய 3 குளங்களையும் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரி, மராமத்து செய்து குடிநீர் ஆதாரத்தைப் பெருக்குவது.
  அண்ணா பல்கலைக் கழக உறுப்பு பொறியியல் கல்லூரிக்கு செல்லும் 6 கி.மீ. நீள மாளியக்காடு-ராஜாமடம் சாலையில், மாளியக்காடு-நடுவிக்காடு வரை சுமார் 1 கி.மீ. தொலைவுக்கு சாலை அகலப்படுத்தப்படாமல் விடுபட்டுள்ளது. அதை உடனடியாக அகலப்படுத்த வேண்டும். வெளிநாட்டில் உள்ள மகிழங்கோட்டை 
  இளைஞர்கள் சார்பில் ரூ.2 லட்சம் செலவில் பொதுஇடங்களில்  மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
  கூட்டத்துக்கு தென்னை உற்பத்தியாளர் நல சங்கத் தலைவர் வழக்குரைஞர் கே.விவேகானந்தன் தலைமை வகித்தார். கிராம நிர்வாக அலுவலர் எஸ்.தினேஷ்குமார், முன்னாள் ஊராட்சித் தலைவர் ஆ. சேதுராமலிங்கம்,  நாம் உழவர் இயக்கத் தலைவர் எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர்  பாலசுப்பிரமணியம், கூட்டுறவு வேளாண்மை வங்கித் தலைவர் வைத்திலிங்கம் மற்றும் கிராம மக்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai